தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் மிரட்டல் எதிரொலி அண்ணாமலைக்கு அமித்ஷா செம டோஸ்: கூட்டணியை மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி

சென்னை: ‘அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்’ என்று மிரட்டல் விடுத்ததை அடுத்து, அண்ணாமலையை நேரில் அழைத்து அமித்ஷா ‘செம டோஸ்’ விட்டுள்ளார். இதனால், ‘தேர்தல் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் அறிவிக்கும்’ என்று அவர் ஒரே அடியாக அந்தர் பல்டி அடித்துள்ளார். தமிழக பாஜ தலைவராக, அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து, அவர் ஏதாவது ஒன்றை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். மாநில தலைவருக்கு தான் வானளாவிய அதிகாரம் உள்ளது என்ற தோரணையில், மூத்த தலைவர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளாகி உள்ளார். இதனால் மூத்த தலைவர்கள், அண்ணாமலைக்கு எதிரான மனநிலையிலேயே இருந்து வருகிறார்கள்.

அதேநேரம், ஜெயலலிதா, கலைஞர் மாதிரி தன்னை அசைக்க முடியாத ஒரு தலைவர் என்பதுபோல, பேட்டி கொடுத்து அவ்வப்போது பரபரப்பை அண்ணாமலை ஏற்படுத்தி வருகிறார். இதற்கிடையில் தான் ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடிக்கும், அண்ணாமலைக்கும் கடும் மோதல் உருவானது. தேர்தலில் அதிமுக அணி படு தோல்வியை சந்தித்தது. ஈரோடு கிழக்கில் 40,000 சிறுபான்மையினர் ஓட்டு பாஜவிடம் கூட்டணி வைத்ததால் அவை அதிமுக வேட்பாளருக்கு வராமல் போய் விட்டது என்று எடப்பாடி அதிருப்தியில் இருந்தார். இதனால், அண்ணாமலைக்கு அதிர்ச்சியை கொடுக்க நினைத்து, திடீரென யாரும் எதிர்பாராத வகையில் பாஜ நிர்வாகிகளை எடப்பாடி தன் கட்சிக்கு இழுக்க ஆரம்பித்தார்.

அதுவும், அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இழுக்கப்பட்டனர். ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகியதால், டெல்லி மேலிடத்தில் தனக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டதே என்று அண்ணாமலை நினைத்தார். தேர்தலில் கட்சி தனித்து போட்டியிட தயார். அனுமதிக்கவில்லை என்றால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று அண்ணாமலை பாஜ தலைமைக்கே திடீர் மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், 2014 மக்களவை தேர்தலில் 3வது அணி 2 தொகுதியில் வெற்றி பெற்றது. 3வது அணி 18 சதவீதம் வாக்குகளையும் பெற்றது.

இதனால், 3வது அணி அமைத்து போட்டியிட்டால் இதே மாதிரி ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்று நினைத்து இருந்தார். அவரது இந்த எண்ணம் நிராசையானது.மோடியையும், அமித்ஷாவுக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் தனித்து போட்டி என்று அண்ணாமலையின் பேச்சில் தெரிந்தது. அண்ணாமலையின் இந்த பேச்சால், தமிழக பாஜவுக்குள் கடும் மோதல் ஏற்பட்டது. கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் அறிவிக்கும். அண்ணாமலையால் தனிப்பட்ட முறையில் அறிவிக்க முடியாது என்றும் பாஜ தலைவர்கள் பலர் பதிலடி கொடுத்தனர்.

அண்ணாமலையின் இந்த பேச்சால் கட்சி மேலிடமும் அவர் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தது. மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தில், காங்கிரஸ் அதிக இடத்தில் வெற்றி பெறும். மத்திய பிரதேசம், ராஜஸ்தானிலும் வந்துவிடும். வடமாநிலங்களில் எல்லாம் போக 75 சீட் ஆட்சி அமைக்க பாஜவுக்கு தேவைப்படும்.  தென்மாநிலத்தை பொறுத்தவரையில் கர்நாடாகாவில், கேரளாவிலும் பாஜ அடி வாங்கி விடும். அதே நேரத்தில் பீகாரில் பாஜ அடிவாங்கும். 75 சீட்டை எங்கிருந்து கொண்டு வருவது என்று தெரியாமல் பாஜ மேலிடம் முழித்து வருகிறது.

தமிழகத்தில் ஒரு சீட் கிடைத்தாலும் சந்தோஷம் தான் என்று டெல்லி மேலிடம் நினைத்து வருகிறது. இந்த ஒரு சீட்டையும் கூட்டணியில் இருந்தால் தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இப்படி, அண்ணாமலை தனித்து போட்டி என்று அறிவித்ததால் டெல்லி கடும் அதிர்ச்சியடைந்தது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அண்ணாமலை டெல்லிக்கு அவசரமாக வர வேண்டும் என்று பாஜ தலைமை உத்தரவிட்டது. டெல்லிக்கு வந்த அண்ணாமலைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் டோஸ் விட்டார்.

‘‘கூட்டணி அமைத்தால் வெளியே போவேன் என்று சொல்கிறாய். வெளியே போ நீ’’ என்று அமித்ஷா கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், வெளியே போனால் உன் நிலைமை என்னாகும் என்று யோசித்து பார். கட்சியை மிரட்டுகிறாயா. தனிக்கட்சி தொடங்க போறாயா. உன்னை பற்றி தெரியாதா.. தமிழகத்தில் நீங்கள் பண்ணும் ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும் என்று அமித்ஷா கடுமையாக எச்சரித்துள்ளார். கூட்டணி சம்பந்தமாக நாங்கள் பேசி கொள்கிறோம்.

தமிழகத்தில் கட்சியை ஒழுங்காக வளர்க்க பாருங்கள், மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று எச்சரித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், டெல்லியில் இருந்து தமிழகம் வந்த அண்ணாமலை, இதுவரை நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி எதுவும் பேசவே இல்லை. சொல்லப்போனால் கூட்டணி பற்றி வாயே திறக்கவில்லை.

அதே நேரத்தில் கூட்டணி குறித்து கேள்வி கேட்க வேண்டாம் என்றும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் ேபாது அவர் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. கூட்டணி என்றால் நான் வெளியே போவேன் என்று சொன்னவர், மாநில தலைவர் பதவி வேண்டாம் என்று சொன்னவர். கூட்டணி குறித்து மேலிடம் முடிவு செய்யும் என்று அந்தர் பல்டி அடித்து விட்டார். இதற்கு அமித்ஷா கொடுத்த டோஸ் தான் காரணம் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, எடப்பாடி சொல்லும் சீட்டை வாங்கி கொண்டு வேலை பார்ப்பதற்கு அண்ணாமலை தயாராகி விட்டார். அண்ணாமலையின் வீராவேசம் 24 மணி நேரம் கூட நிலைக்கவில்லை. 24 மணி நேரம் முடிவதற்குள் அமித்ஷாவை பார்த்து அண்ணாமலை டோஸ் வாங்கி விட்டு திடீர் பல்டி அடித்து விட்டார். இதனால், மாநில தலைவர் மாற்றம் என்ற பயம் கூட அண்ணாமலைக்கு இருந்து வருகிறது. இதனால், தான் அவர் அமைதியாக இருந்து வருதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: