139 அரசு பள்ளிகளை சேர்ந்த 35,000 மாணவ, மாணவியர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: 139 அரசு பள்ளிகளை, சென்னை மாநகராட்சி பள்ளிகளுடன் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மூலம் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடங்கள், அடிப்படை வசதிகளுடன் மாநகராட்சி பள்ளிகள் தன் பங்களிப்பை வழங்கி வருவதால் பெற்றோர், தங்களது பிள்ளைகளை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

மாநகராட்சி ஸ்மார்ட் வகுப்பறையானது தனியார் பள்ளிகளுக்கே சவால் விடும் அளவிற்கு உள்ளது. பள்ளிகளில் சிசிடிவி கேமரா, விளையாட்டு திடல்,காலை உணவு, ஆங்கில பயிற்சி என இன்னும் பல சலுகைகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை நகரின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் கடந்த சில வருடங்களாக பள்ளிக் கல்வி துறையின்கீழ் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இந்த பள்ளிகள் இருந்தாலும் கூட அரசு பள்ளிகளாக செயல்பட்டு வந்தன. இதனால் நிர்வாக ரீதியான பிரச்னை ஏற்பட்டது.

மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கி இந்த பணிகள் செயல்பட்டு வந்தன. இத்தகைய பணிகளை மாநகராட்சி பள்ளிகளுடன் இணைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 139 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இந்த பள்ளிகள் மாநகராட்சியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்டது. இந்த பள்ளிகள் சென்னை பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு படித்த 35,000 மாணவ-மாணவியர்கள் தங்களது கல்வியை தொடர சென்னை மாநகராட்சி அனைத்து வசதிகளையும் செய்துள்ளது.

Related Stories: