மீண்டும் அதிகரிக்கும் தொற்று நாடு முழுவதும் ஏப்ரல் 10, 11ல் கொரோனா தடுப்பு ஒத்திகை: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி, ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக தொற்றின் தாக்கம் குறைந்த வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து பிரதமர் மோடி கடந்த 22ம் தேதி, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளுக்கு மீண்டும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது.

அதில்,“மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரிசோதனைகளின் அளவு ஒப்பீட்டு அளவில் திருப்திகரமாக இல்லை. எனவே, மாநிலங்களின் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்” என  அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், “பருவநிலை மாற்றம் காரணமாக கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாச பிரச்னை அதிகம் ஏற்படுவதால், அவர்களுக்கு விரைந்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும். சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்படுவர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்தப்படும். இதற்காக மாநில அரசுகள் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: