சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில்   பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை நேற்று முதல் 8 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளன. சென்னை விமான நிலையத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில், இதுவரை பயணிகளின் வசதிக்காக 4 பேட்டரி வாகனங்கள் இலவச சேவையாக இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் அங்கு நாளொன்றுக்கு பயணிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் ஏற்கனவே இயங்கி வரும் 4 பேட்டரி வாகனங்களில் செல்வதற்கு பயணிகளின் நெரிசல் அதிகரித்தது. இதை தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, கூடுதலாக 4 புதிய பேட்டரி வாகனங்கள் வாங்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, சென்னை விமான நிலையத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இடையே நேற்று முதல் கூடுதலாக 4 புதிய பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

உள்நாட்டு முனையத்தில் ஏற்கனவே இயங்கும் ஒரு பேட்டரி வாகனத்துடன் கூடுதலாக 2 புதிய வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், சர்வதேச முனையத்தில் கூடுதலாக ஒரு பேட்டரி வாகனம் இயக்கப்படுகிறது. மேலும், சென்னை விமானநிலையத்தின் கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்கும் விதத்தில், புதிதாக 2 பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு உடனுக்குடன் பேட்டரி வாகனங்கள் கிடைக்கும். அவர்கள் தங்கள் லக்கேஜ்களை டிராலிகளில் வைத்து தள்ளிக்கொண்டு சிரமப்படாமல், பேட்டரி வாகனங்களில் ஏற்றிக்கொண்டு இலவசமாக பயணம் செய்யலாம். இந்த பேட்டரி வாகனங்கள் வயதானவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள் போன்றவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.

Related Stories: