ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிரொலித்தது. எழும்பூர் பரந்தாமன் (திமுக): தமிழ்நாட்டில் நிதி பற்றாக்குறையை சரி செய்ய, ரூ.62 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்திடம் இருந்து வரக்கூடிய ஜிஎஸ்டி நிலுவை தொகை வராமல் உள்ளது. செலவுகளை குறைத்து இருக்கிறோம். சமூக நலத்திட்ட நிதி அதிகமாக கொடுத்து இருக்கிறோம். இது தான் திராவிட மாடல் ஆட்சியின் வழிகாட்டியாக இந்தியாவிற்கே உள்ளது.

மகளிர் உரிமை தொகை அறிவிப்பு என்பது ஒரு அசாத்தியமான சாதனை. ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து முதல்வர் அடிப்பது எல்லாம் சிக்சர்தான். செப்.15 அண்ணா பிறந்தநாளன்று மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்குவது என்பது பெண்களுக்கான உதவி மட்டுமல்ல, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா, கலைஞரும் வலியுறுத்திய சுயமரியாதை நிலைநாட்டிய மகத்தான திட்டம் இது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் ஒன்றிய அரசின் அனுமதி தவிர மற்ற அனைத்திற்கும் அரசாணை போடப்பட்டுள்ளது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி: அதிமுக ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்த்தவில்லை... விலை வாசி உயர்த்த வில்லை... கொரோனா பெருந்தொற்றை திறமையாக கையாண்டு.... (அப்போது நிதிமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறுக்கிட்டார்)

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: அதிமுக ஆட்சி வரும்போது 30 ஆயிரம் கோடி இருந்த கடனை 10 வருடத்தில் 1 லட்சம் கோடி உயர்த்திவிட்டனர். ஏற்கனவே கொடுத்து இருந்த கடன் எல்லையில் திடீரென ரூ.5400 கோடி குறைத்து விட்டு கொடுத்தனர். ஏன் குறைத்தீர்கள் என்று கேட்டோம். 2020-21ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இறுதியாண்டில் கணக்கில் காண்பிக்கப்பட்டும், எடுக்கப்பட்டும் இருந்த கடனுக்கு ரூ.5400 கோடி கூடுதலாக இருந்தது. அந்த எல்லைமீறலின் காரணமாக எங்களுக்கு குறைத்து இருப்பதாக கூறினார். ஆட்சி மாறினாலும், தமிழ்நாடு ‘தமிழ்நாடு’ தானே என்று கூறிவிட்டனர். இது எல்லாம் சிறப்பான அடையாளமா என கேட்டுக்கொள்கிறேன் என தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன்: சட்டப்பேரவையில் ஜனநாயக முறைப்படி உங்களை இவ்வளவு மணி நேரம் பேச விடுகிறோம். ஆனால் பேசியதற்காகவே ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர்.

Related Stories: