அதானி விவகாரத்தில் விசாரணை கேட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி 40 எம்பிக்கள் அதிரடி கைது

புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி போராட்ட பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த 40  எம்பிக்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.  அதானி முறைகேடு குறித்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற விசாரணை கோரி எதிர்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினார்கள்.

தடையை மீறி பேரணி சென்றதாக எம்பிக்கள் கேசி வேணுகோபால், அதிர் சவுத்ரி, சுரேஷ், மாணிக்கம் தாகூர், இம்ரான் பிரதாப்கர்ஹி மற்றும் முகமத் ஜாவீத் உள்ளிட்டோரை விஜய் சவுக் அருகே தடுத்து நிறுத்திய போலீசார் தடையை மீறி பேரணி நடத்தியதாக கைது செய்தனர்.  144 தடை உத்தரவை மீறியதாக காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகளை சேர்ந்த 40 எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அருகே உள்ள காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Related Stories: