பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல் பாலிடெக்னிக் கல்லூரிகள் திறன்மிகு மையங்களாக மாற்றம்

சென்னை: அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம்(திமுக), மேட்டூர் சதாசிவம்(பாமக) ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்து பேசியதாவது: பாலிடெக்னிக் கல்லூரிகளில் இப்போது சேர்க்கை குறைவாகத்தான் இருக்கிறது. 6,295 மொத்த இடங்களில், 3,884 இடங்கள் காலியாக இருக்கின்றன. தொழில் துறை 4.0 தரத்திற்கு ஏற்ப, அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் அரசு தொடங்கும். அதுமட்டுமல்ல, மேலும் அவர், தொழிற் பயிற்சி நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்குதல், திறமையான பணியாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன் ரூ.120 கோடி செலவில் சென்னை, அம்பத்தூரில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

இந்த மையத்தில், இயந்திர மின்னணுவியல், அதேபோல இணைய வழிச் செயல்பாடு, அதிநவீன வாகனத் தொழில்நுட்பம், துல்லியப் பொறியியல் மற்றும் உயர்தர வெல்டிங் போன்ற தொழில்நுட்பங்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும். ஆகவே, பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் திறனை வளர்க்க வேண்டும். அங்கே பயில்கின்ற மாணவர்களுக்கு வேலைப் பயிற்சி அளிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு பட்ெஜட்டில் இவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே இந்த பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆர்வம் குறைந்திருக்கிறது. அதை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. அவைகளில் வேலைவாய்ப்பு பெறுகின்ற வாய்ப்புகளை இந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் உருவாக்குவோம். வருகிற காலங்களில் மாணவர்களுடைய எண்ணிக்கை உயரும். அந்த எண்ணிக்கையின் உயர்வைப் பொறுத்து, புதிய கல்லூரிகள் துவங்குவதைப் முதல்வர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: