ஆக்கிரமிப்பு நோட்டீஸ் வழங்குவதை கண்டித்து வருவாய் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நீண்டகாளமாக வசிப்பவர்களுக்கு, ஆக்கிரமிப்பார்கள் என நோட்டீஸ் வழங்குவதை கண்டித்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்களை, ஆக்கிரமிப்பாளர்கள் என வருவாய்த் துறையினர் நோட்டீஸ் வழங்குவதை கைவிட வேண்டும். நிலவகை மாற்றம் செய்து, பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தாம்பரம் சானிடோரியம் பகுதியில் உள்ள தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வக்குமாரை நேரில் சந்தித்து, அவர்கள் மனு அளித்தனர். அப்போது, அரசு ஒதுக்கிய நிலத்தில் வசிப்பவர்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் என வருவாய்த்துறை நோட்டீஸ் அளிக்கிறது. நீண்டகாலமாக வசிப்போருக்கு நோட்டீஸ் கொடுப்பதை நிறுத்த வேண்டும். ஏற்கனவே, கொடுத்த நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க கூடாது. புதிதாக உட்பிரிவு செய்து பட்டா வழங்க ஜனவரி மாதம் வெளியிடப்பட்டுள்ள அரசாணைப்படி பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த வருவாய் கோட்டாட்சியர் இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பின், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: