ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு விதிப்பதால் சுதந்திரத்தை இழந்தும் தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.32 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது: அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமிக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்

சென்னை: ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு விதிப்பதால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்து விட்டது. அப்படி இருந்தும் தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.32 ஆயிரம் கோடி  குறைக்கப்பட்டுள்ளது என்று அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமிக்கு, அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். சட்டப்பேரவையில் நேற்று நடந்த பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான  விவாதத்தில் கலந்துகொண்டு வேப்பனஹள்ளி தொகுதி உறுப்பினர் கே.பி.முனுசாமி  (அதிமுக) பேசியதாவது: தமிழகம் பல்வேறு நிலைகளில் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், இந்த திராவிட இயக்கம் ஆட்சிக் கட்டிலில் ஏறிய பின்பு அதாவது, அண்ணாவிலிருந்து, எம்ஜிஆரிலிருந்து, ஜெயலலிதாவிலிருந்து, கலைஞரிலிருந்து இந்த திராவிட இயக்கத்தின் முதல்வர்கள் ஆண்ட காலகட்டத்தில் இந்த தலைவர்கள் எடுத்த நடவடிக்கையின் காரணமாகத்தான் அனைத்திலும் முதன்மை மாநிலமாக இருந்து கொண்டிருக்கிறது. 1982ம் ஆண்டு எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

அப்போது, எல்லோருமே அரசின் கஜானா காலியாகிவிடும் என்றார்கள். அப்போது திமுகவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் கலைஞர் கூட ஒரு ஆலோசனையை கூறினார். மாணவர்களுக்கு உணவுக்காக ஒதுக்கப்படும் நிதி ரூ.15ஐ மாதந்தோறும் குழந்தைகளின் தாயாரிடம் கொடுத்துவிடலாம் என்று யோசனை தெரிவித்தார்.  ஆனாலும், சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். வெற்றிகரமாக நிறைவேற்றினார். கிராம அளவில் மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். அனைத்து வகையிலும் மாநிலம் வளர்ச்சி அடைந்ததற்கு 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியே காரணம்.

அமைச்சர் க.பொன்முடி: ஏதோ அவர்கள் ஆட்சியில்தான் கல்வி வளர்ந்தது மாதிரி சொல்கிறார். உண்மையிலேயே ஆரம்பக் கல்விக்கு 5 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருக்க வேண்டுமென்று சொன்னவர் காமராஜர். அதையேகூட, 3 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருக்க வேண்டுமென்று சொன்னவர் கலைஞர். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியை உருவாக்க வேண்டுமென்று சொன்னவர் கலைஞர். அது உயர் கல்வி என்று சொன்னால், கலைஞர் ஆட்சியில் வளர்ந்ததுதான். அதுவும் இரு மொழிக் கொள்கையை அண்ணா கொண்டு வந்து, அதை அமல்படுத்தி தமிழ் படிக்கின்ற மாணவர்களுக்கென்று தனிச் சலுகைகளை கொடுத்தவரும் கலைஞர்தான். எனவே, உயர் கல்வி வளர்ச்சி என்பது  கலைஞருடைய ஆட்சியில்தான். எனவே, கல்வி வளர்ச்சி என்பது திமுக ஆட்சியில்தானே தவிர, மற்ற ஆட்சியில் கிடையாது.

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று சொல்வார்கள். நிதி இருந்தால்தானே அதை செலவு செய்ய முடியும். கடனை ஏற்றிக் கொண்டே சென்றால் வட்டிச் சுமை அதிகரிக்கும். அன்று வாட் வரியை ஒரு சதவீதம் உயர்த்திய பிறகுதான், சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆரால் செயல்படுத்த முடிந்தது. இப்போது, ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு விதிப்பதால், மாநில அரசுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டது. அதனால் அன்று ஜிஎஸ்டியை எதிர்த்த முதல்வர்களில் முதலில் நின்றது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியும், 2வதாக நின்றது தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்தனர். அப்படி இருந்தும் தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.32 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1லட்சம் கோடிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் புதுத் திட்டம் கொண்டு வருவதற்கு எந்த குறைவும் இல்லை. இருக்கிற நிதியில் சிறப்பாகக் கையாண்டு இதை செய்திருக்கிறோம். இவ்வாறு பதில் அளித்தனர். ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு விதிப்பதால், மாநில அரசுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டது.

Related Stories: