எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்

* ஜனநாயகத்தில்  புதிய வீழ்ச்சி மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர், திரிணாமுல் காங். தலைவர்): ‘‘பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜவின் முக்கிய இலக்காக மாறியுள்ளனர். குற்றப்பின்னணி கொண்ட பாஜ தலைவர்கள் ஒன்றிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டாலும், எதிர்க்கட்சி தலைவர் தங்கள் பேச்சுகளுக்காக தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இன்று நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தில் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம்’’

* நாட்டில் ஒரே கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர், ஆம் ஆத்மி தலைவர்): ‘‘மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. நாடு மிகவும் கடினமான காலகட்டத்தை கடந்து வருகிறது. இது மிகவும் கவலை அளிக்கும் சூழ்நிலை. இது காங்கிரஸ் அல்லது ராகுலின் போராட்டம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் போராட்டம். நாட்டில் ஒரே கட்சி என்ற நிலையை உருவாக்க பாஜ விரும்புகிறது. இது சர்வாதிகாரம். சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேய ஆட்சியாளர்களை விட பாஜ அரசாங்கம் மிகவும் ஆபத்தானது. இந்த ஆணவ சக்திக்கு எதிராக நூற்று முப்பது கோடி மக்கள் ஒன்றிணைய வேண்டும்.’’

* திசை திருப்பும் முயற்சி

அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி தலைவர்): பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் இந்தியாவின் பணத்தை முறைகேடு செய்த தொழிலதிபர் நண்பர் போன்ற உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகள் பற்றி எல்லாம் அவர்கள் விவாதிக்க விரும்பவில்லை. இப்படி எல்லாவற்றையும் பார்த்தால் பல பாஜ தலைவர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்.

* ஜனநாயகத்தின் கொலை

உத்தவ் தாக்கரே (சிவசேனா  தலைவர்): இது ஜனநாயகத்தின் கொலை. சர்வாதிகாரத்தின் முடிவின் ஆரம்பம். நாட்டை கொள்ளையடிப்பவர்கள் வெளியில் இருக்கும் நிலையில், திருடனைத் திருடன் என்று அழைப்பது குற்றமாகி விட்டது.

* அமிர்த காலமல்ல, அவசரகாலம்

ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முதல்வர்): ‘‘ராகுலின் தகுதிநீக்கம், அரசியல் வேறுபாடுகள் இப்போது எதிரிகளை பழிவாங்கல்களாக மாறியுள்ளன என்பதை எடுத்துக் காட்டுகிறது. இன்றயை அமிர்த காலத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜவின் ஒருதலைப்பட்ச இலக்குகளாகி உள்ளனர். இது தேசத்தின் அவசரகாலம். ஒன்றிய அரசின் ஒவ்வொரு அதிகார அமைப்பையும் பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்கள் வற்புறுத்தி மவுனமாக்கப்படுகிறார்கள்.

* கருப்பு நாள்

சந்திரசேகர்ராவ் (தெலங்கானா முதல்வர், பிஆர்எஸ் தலைவர்): இந்திய ஜனநாயக வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள். ஜனநாயகம் மீண்டும் மலர வேண்டும் என்று விரும்புவோர் அனைவரும் பாஜ அரசின் தவறான செயல்களை கண்டிக்க வேண்டும். ஏமாற்று நபர்களுக்காக எதிர்க்கட்சி தலைவர்களை தகுதி நீக்கம் செய்வதன் மூலம் மோடி தனது வீழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

* வாழும் உதாரணம்

பூபேஷ் பாகேல் (சட்டீஸ்கர் முதல்வர்): சர்வாதிகாரியின் மிகப்பெரிய பயம், மக்கள் அவரைப் பார்த்து பயப்படுவதை நிறுத்திவிடுவார்களோ என்பதுதான். ஒட்டுமொத்த தேசத்துக்கும் பயப்படாதே என்று சொல்பவரை பயமுறுத்த விரும்புகின்றனர். இதே தவறை இந்திராகாந்தியிடம் சிலர் செய்தார்கள். ஆனால் அவர் வெற்றியுடன் திரும்பினார். பாஜ கட்சி ஜனநாயகத்தை கொலை செய்ய விரும்புகிறது. அதற்கு ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கையே வாழும் உதாரணமாகும்.

* சர்வாதிகாரத்திற்கு எடுத்துக்காட்டு

அசோக் கெலாட் (ராஜஸ்தான் முதல்வர்): ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது சர்வாதிகாரத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. இந்திரா காந்திக்கு எதிராகவும் இதே முறையை அவர்கள் பின்பற்றியதால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதை பாஜ மறந்துவிடக்கூடாது.   இந்த சர்வாதிகாரத்திற்கு எதிராக வலுவாக இருக்கும் நாட்டின் குரலாக ராகுல் காந்தி திகழ்கிறார்.

* பாசிச நடவடிக்கை

பினராய் விஜயன் (கேரள முதல்வர்): ராகுல் காந்தியை அவசர அவசரமாக தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகத்தின் மீதான சங்பரிவார் தாக்குதலின் சமீபத்திய அத்தியாயம். எதிர்ப்பை வலுக்கட்டாயமாக ஒடுக்குவது என்பது பாசிச நடவடிக்கை.

* அரசு பங்களாவை காலி செய்யணும் கடந்த 2004ம் ஆண்டு மக்களவை எம்பியாக ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு டெல்லி லுத்தியன்ஸ் பகுதியில் உள்ள எண் 12, துக்ளக் லேன் பங்களா ஒதுக்கப்பட்டது. தற்போது அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்ய வேண்டியிருக்கும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மக்களவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், ராகுல் இனி அரசு பங்களாவில் தங்கும் உரிமை இல்லை. விதிகளின்படி, தகுதிநீக்கம் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் பங்களாவை காலி செய்ய வேண்டும்’’ என்றார். இந்த வழக்கில் ராகுல் மேல்முறையீடு செய்ய சூரத் நீதிமன்றம் 30 நாள் அவகாசம் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: