நெடுஞ்சாலைத்துறை பணிகள் குறித்து ஆய்வு சாலை, மேம்பாலம் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

சென்னை: நிலுவையில் உள்ள சாலைப் பணிகள், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை அதிக கவனம் செலுத்தி விரைவில் முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலைத்துறையின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு நேற்று செய்தார். பின்னர் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: திருவையாறு புறவழிச்சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையின்போது, அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்ட விவரத்தை ஆய்வு செய்து ஒவ்வொரு அலகாக அனைத்து தலைமைப் பொறியாளர்களிடம், கோடை காலத்தில் ஆறுகளின் குறுக்கே நிறைவேற்றப்பட வேண்டிய பாலப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

நில எடுப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும், நில எடுப்பு பணிகள் முடிந்த பின்னரே சாலைப்பணிகள் துவங்கப்பட வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள சாலைப் பணிகளையும், மேம்பாலம், ரயில்வே மேம்பாலம் போன்றவற்றையும் அதிக கவனம் செலுத்தி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். மேலும், அரசு நிதி ஒப்பளிப்பு, நிர்வாக அனுமதி வழங்கியும் முடிக்கப்படாத பணிகளை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ், தலைமைப் பொறியாளர்கள்  பி.ஆர்.குமார், முதன்மை இயக்குநர் சந்திரசேகர், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பாலமுருகன், தேசிய நெடுஞ்சாலை முருகேசன், திட்டங்கள் கீதா, நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் சாந்தி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-II இளங்கோ, திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு சேகர், பெருநகர் செல்வன் பங்கேற்றனர்.

Related Stories: