தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ ரயில் அரங்கிற்கு 3வது இடம்

சென்னை: சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் அரசின் பல்வேறு அரசு துறை அரங்கங்களும், அரசு சார்ந்த நிறுவனத்தின் அரங்கங்களும் தனியார் அரங்கங்களும் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட்டு வந்தனர். இந்த பொருட்காட்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடம் கண்கவர் அரங்கமாக பொதுமக்களின் பார்வைக்கு இடம்பெற்றது. சுற்றுலா பொருட்காட்சி நிறைவு நாளன்று பொருட்காட்சியில் அரசுத் துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் அமைக்கப்பட்ட அரங்குகளில் சிறந்த அரங்குகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், அரசு சார்ந்த நிறுவனங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அரங்கு 3வது இடம் பிடித்து அதற்கான பரிசை பெற்றுள்ளது.

சென்னை: தீவுத்திடலில் நடந்த நிறைவு விழாவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அரங்கு 3வது இடம் பிடித்ததற்கான பரிசை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யாவிடம் வழங்கினர். அப்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக செயலாளர் சந்தரமோகன், இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் உடனிருந்தனர்.

பரிசு பெற்றுக்கொண்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யா கூறுகையில், ‘‘அடுத்த ஆண்டு நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் இடத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒட்டுமொத்த வகையில் சிறந்த அரங்கிற்கான பரிசை பெற முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்த அரங்கை வார நாட்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 500 பார்வையாளர்களும், வார இறுதி நாட்களில் சராசரியாக 1200 பார்வையாளர்களும் என 54 ஆயிரத்து 900 பேர் பார்வையிட்டுள்ளார்கள். 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அரங்கில் வைக்கப்பட்டிருந்த க்யூ குறியீடு மூலமாகவும், பதிவேடு மூலமாகவும் தெரிவித்துள்ளார்கள். பொதுமக்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அரங்கில் பயண அட்டை விற்பனையும் நடந்தது. இதுவரை 893 பயண அட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் 3ம் பரிசை இந்த அரங்கிற்கு வழங்கியது பெரும் மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது. அரசு சார்ந்த நிறுவனங்களில் மெட்ரோ நிறுவனத்தை 3ம் இடத்திற்கு தேர்வு செய்தமைக்கு நன்றி’’ என்றார்.

Related Stories: