ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 4 மாதங்களுக்கும் மேலாக இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 8ம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்பியதற்கான காரணம் குறித்து ஆளுநர் அளித்துள்ள விளக்கத்தில், ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இந்த சட்ட முன்வடிவை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு  உண்டு’ என மக்களவையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். மசோதா தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு, அரசின் விளக்கங்கள் குறித்தும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். தொடர்ந்து தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்ட முன்வடிவு மறுஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டும்’’ என்றார். இந்த மசோதாவை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரித்து பேசினர். இதையடுத்து மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: