மூணாறு அருகே அட்டகாசம் செய்யும் அரிசி கொம்பனை பிடிக்க ‘விக்ரம், சூர்யா’ வருகை-4 கும்கிகளுடன் 26ம் தேதி ஆபரேஷன் ரெடி

மூணாறு : மூணாறு அருகே அட்டகாசம் செய்யும் அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்க 4 கும்கி யானைகள் பயன்படுத்தப்பட உள்ளன. யானையை பிடிப்பதற்காக 26ம் தேதி 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம், மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரிசி கொம்பன் காட்டு யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சிகள், பொது மக்களின் போராட்டங்கள் வலுவடைந்ததை தொடர்ந்து யானையை பிடிக்க வனத்துறை தீர்மானித்துள்ளது. இதனிடையே அதிக தாக்குதல் குணம் கொண்ட அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில், ‘‘அரிசி கொம்பனை பிடிப்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு விக்ரம் என்ற கும்கி யானை சின்னக்கானல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று சூர்யா கும்கி யானை வந்துள்ளது. இன்று 2 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு 25ம் தேதி அரிசி கொம்பனை பிடிக்க சோதனை முயற்சி நடைபெறும். பின்னர் 26ம் தேதி சின்னக்கானல் பகுதியில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு யானையை பிடிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அன்றைய தினம் சின்னக்கானல் சிமென்ட் பாலம் பகுதியில் போலியான ரேஷன் கடை அமைக்கப்பட்டு அரிசி உட்பட ரேஷன் பொருட்கள் வைக்கப்பட்டு யானையை வரவழைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

இங்கு வரும் அரிசி கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு சூர்யா, விக்ரம் உட்பட 4 கும்கி யானைகள் உதவும். இதில் விக்ரம், சூர்யா கும்கி யானைகள் ஏற்கனவே கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 2 கும்கி யானைகளும் கொண்டு வரப்படும். கேரளத்திலேயே சிறப்பு பயிற்சி பெற்ற கும்கி யானைகள்தான் இதற்காக உபயோகிக்கப்படுகிறது. அரிசி கொம்பனை பிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். இதற்கான எல்லா நடவடிக்கைகளும் பூர்த்தியாகி விட்டது. 26ம் தேதி யானை பிடிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றனர்.

Related Stories: