ஐகோர்ட்டிற்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஒதுக்கீடு 75. தற்போது 58 நீதிபதிகள் உள்ளனர். இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும், பி.வடமலையை கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். மேலும், ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த், தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி தேவராஜூ நாகார்ஜுன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்தும் ஜனாதிபதி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. மூன்று புதிய நீதிபதிகளை நியமனத்தையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் உயர் நீதிமன்ற பதிவாளர் தனபால் உள்ளிட்ட 4 பேரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இவர்களும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டால் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயரும்.

Related Stories: