டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு டி.எம்.எஸ் பெயர்: கலைவாணர் அரங்கில் இன்று மாபெரும் இன்னிசை கச்சேரி

சென்னை: டி.எம்.சௌந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு டி.எம்.எஸ் பெயர், சாலையின் பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தமிழ்நாடு அரசு சார்பில் இன்று இசை கச்சேரி நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு, டி.எம்.சௌந்தரராஜன் சாலை என புதிய பெயர் சூட்டப்படவுள்ள சாலையின் பெயர் பலகையை, காலை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, டி.எம்.சௌந்தரராஜன் அவர் பாடிய புகழ்பெற்ற பாடல்களை நினைவுகூரும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், இன்று மாலை 5.00 மணியளவில் மாபெரும் இன்னிசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. தமிழ்த் திரையுலகில் 1950ம் ஆண்டு வெளியான கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் “ராதை நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடல்தான் அவர் குரலில் ஒலித்த முதல் பாடல் ஆகும். அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் சிறப்புமிக்க பாடகராகத் திகழ்ந்தார். தொடர்ந்து, திரையுலகில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களில் இடம் பிடித்தார்.

அவருடைய குரல் வளம், இசை ஞானம் மூலம் தனித்துவமான பாடல்களை பாடி திரையிசை வரலாற்றில் முத்திரைப் பதித்தவர் டி.எம்.சௌந்தரராஜன். டி.எம்.சௌந்தரராஜன் 2013ம் ஆண்டு மே 25ம் தேதி மறைந்தார். மறைந்தும், அவர் பாடிய பாடல்கள் மூலம் வாழ்கின்ற டி.எம்.சௌந்தரராஜனின் புகழுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், மாபெரும் இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சியில் மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சியை அனைவரும் கண்டுகளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைவரும் வருக, அனுமதி இலவசம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: