மக்கள்நல, சமூகநல திட்டங்களுக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி குறைப்பு: பேரவையில் எம்எல்ஏ டாக்டர் எழிலன் பேச்சு

சென்னை: மக்கள் நல, சமூக நல திட்டங்களுக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டது என சட்டப்பேரவையில் ஆயிரம்விளக்கு எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் குற்றம் சாட்டினார். தமிழ்நாடு சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் எழிலன் (திமுக) பேசியதாவது: வீழும் பொருளாதாரத்தை மீட்டெடுத்து சரி செய்து முதலமைச்சர் வெற்றி பயணத்தில் உள்ளார். கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போதும் தடுப்பூசிகள் செலுத்தி, படுக்கை வசதிகள் அதிகரித்து, ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்து, ஒவ்வொருவரு ரேஷன் கார்டுக்கும் ரூ.4000 கொடுத்து நிதி பற்றாக்குறையை குறைத்த அரசு நமது திமுக அரசு.

2019, 2020 35,000 கோடி வருவாய் பற்றாக்குறை இருந்தது. இந்த ஆண்டு 30000 கோடி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது என்றால் இது நிதி மேலாண்மையும், நிதித்திறமையையும் காட்டுகிறது. இக்கட்டான சூழலில் சமுக நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து நிதி ஆதாரங்களை சேர்த்தது திராவிட மாடல் அரசு.   ஒன்றிய அரசு பட்ஜெட்டில் அனைத்து மக்கள் நல, சமூக நல திட்டங்களுக்கும் நிதியை குறைத்துள்ளது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கல்விக்கு, சமூக நல திட்டத்துக்கு அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளது. சமூக நலத்திட்டத்துக்கு மட்டும் ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளர் உரிமைத்தொகை திட்டம், பெண்ணியத்தை மீட்டெடுக்கும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த திட்டத்தை முதல்வர் பெயரில் செயல்படுத்த வேண்டும்.  காலை உணவு திட்டத்தால் 624 பள்ளிகளில் 10 சதவீதம், 462 பள்ளிகளில் 20 சதவீதம், 199 பள்ளிகளில் 30 சதவீதம் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தொழில்துறை 2 லட்சம் முதலீடுகள், 3.9 லட்சம் வேலைவாய்ப்பு, தொழில்துறையில் சேர திறன் மேம்பாட்டு மையங்கள் என தொழில் வளர்ச்சியை மையப்படுத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இது கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றும் அரசு, அனைத்து தரப்பினரும் வைக்கும் கோரிக்கையை ஆராய்ந்து நிறைவேற்றும் அரசு திராவிட மாடல் அரசு. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: