அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடனை திருப்பி கொடுக்க ரூ.43 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: நத்தம் விஸ்வநாதன் கேள்விக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்

சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான முதல் நாள் விவாதம் நடந்தது.

விவாதத்தை தொடங்கி வைத்து, அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் (நத்தம் தொகுதி) பேசுகையில், ‘‘கடந்த ஆட்சி காலத்தில் 2012-2013ம் ஆண்டில் ரூ.1,739 கோடி உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறையை உற்பத்தி சதவீதத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.  

நத்தம் விஸ்வநாதன்: வரும் ஆண்டில் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 197 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளீர்கள். பட்ஜெட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், திமுக தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழகத்தை அதிமுக கடனில் தள்ளிவிட்டதாக கூறினீர்கள். ஆட்சிக்கு வந்தால், கடனில் இருந்து மீட்போம் என்றும் தெரிவித்தீர்கள். ஆனால், வாங்கும் கடன் அளவை குறைக்காமல் கூட்டியுள்ளீர்கள்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: ஏற்கனவே, அதிமுக ஆட்சி காலத்தில் நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கும் சேர்த்துத்தான் கடன் வாங்கப்படுகிறது. ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் கோடியில் அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன் தொகையை திருப்பி கொடுப்பதற்கே ரூ.43 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறுகிறார். நிதி பற்றாக்குறையை 3 சதவீதம் அளவுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்குள் நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். அதிமுக ஆட்சி காலத்தில் 11 ஆண்டுகள் ஏன் வருவாய் பற்றாக்குறையை குறைக்கவில்லை. நாங்கள் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் குறைத்திருக்கிறோம்.

நத்தம் விஸ்வநாதன்: கடந்த 2 ஆண்டு கால திமுக ஆட்சியில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ( அப்போது சபாநாயகர் அப்பாவு, ” நத்தம் விஸ்வநாதனுக்கு ஒதுக்கப்பட்ட 10 நிமிட நேரம் முடிந்துவிட்டதாக தெரிவித்தார். அவரை பேச்சை முடித்துக்கொள்ளுமாறு கூறினார்).

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: அதிமுக ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.

சபாநாயகர் அப்பாவு: தி.மு.க. உறுப்பினர்கள் 133 பேர் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை பேச வழங்கப்பட்ட நேரம் 57 மணி 43 நிமிடங்கள். அதிமுக உறுப்பினர்கள் 66 பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு பேச வழங்கப்பட்ட நேரம் 43 மணி 57 நிமிடங்கள். அதாவது, ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கே அதிகம் பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: பொது வெளியில் பேசிய விஷயத்தை உறுப்பினர் சட்டசபையில் பேசக்கூடாது.

நத்தம் விஸ்வநாதன்: பட்ஜெட் உரையை நாங்கள் குற்றம் சாட்டி பேசுவதால், அதை தடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

சபாநாயகர் அப்பாவு: தேவை இல்லாத வார்த்தையை அவையில் பயன்படுத்தக்கூடாது.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: எல்லா ஆட்சியிலும் பட்ஜெட் அறிக்கையின் பின்பகுதியில், அட்டவணை வெளியிடப்படும். அது இந்த ஆண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் எதையும் மறைக்கவில்லை.

அவை முன்னவர் துரைமுருகன்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை தான் சொல்வார்கள். அதற்கு பதில் சொல்ல தெம்பும், திராணியும் ஆளும் கட்சிக்கு இருக்கிறது. அவரை பேச விடுங்கள்.

நத்தம் விஸ்வநாதன்: பத்திரப்பதிவு கட்டணத்தை 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நிலம் வாங்குபவர்களுக்கு சுமையை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் சாதுர்யமாக ஏற்றப்பட்டுள்ளது.

அமைச்சர் எ.வ.வேலு: 2016-2021ம் ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 300 சதவீதம் உயர்த்தப்பட்டது. அப்போது, நாங்கள் எல்லாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். வருவாய் கூடும்போது இதுபோன்று செய்வது தவறல்ல. இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: