ராகுல் காந்திக்கு தண்டனை விதிப்புக்கு கண்டனம் தலைமை செயலகம் முன் எம்எல்ஏக்கள் மறியல்: பல இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

சென்னை: ராகுல்காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை தலைமை செயலகம் முன்பு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. பிரதமர் மோடி குறித்து கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் குஜராத் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் வழங்கியது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை தலைமை செயலகம் எதிரே பிரதான சாலையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதேபோல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் துணை தலைவர்கள் கோபண்ணா,  பொன்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தனர். இதில் மாவட்ட  தலைவர்கள் எம்.எஸ்.திரவியம்,  டெல்லி பாபு உள்ளிட்ட மாநில, மாவட்ட  நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை அண்ணா சாலை தர்கா அருகில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன், மாவட்ட தலைவர்கள் மணிகண்டன், பிரதாப் மற்றும் இளைஞர் காங்கிரசார் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில் எழும்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் போரூர் ரவுண்டானா பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதேபோல பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவரும், மாவட்ட தலைவருமான எம்.எஸ்.திரவியம் தலைமையில் ராயபுரம் சிக்னல் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதில், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், தீர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகுமாரன், மூத்த துணைத் தலைவர்கள் எம்.எஸ்.பத்மநாபன், லோகநாதன், சர்க்கிள் தலைவர்கள் ஆர்.கே.நகர் சையத், வீராரெட்டி, காலனி சிவா, சக்தி டி.நாகேந்திரன், ஏ.பி.ஆறுமுகம், லோகநாதன், மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயந்தன், மனித உரிமை துறை பிரிவு மாவட்ட தலைவர் வால்டாக்ஸ் ரோடு ஜெ.ரமேஷ், மாவட்ட துணை தலைவர் பர்மா பஜார் நாகூர்கனி மற்றும் 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர்.

பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டில்லி பாபு தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திட்டமிட்டு ராகுல் காந்தி பழிவாங்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கூறி ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அகரம் கோபி மாவட்ட விளையாட்டு துறை தலைவர் பெரம்பூர் நிசார், ரஜினி செல்வம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: