எண்ணூர் முகத்துவார ஆற்றை தூர்வாரி ரூ.150 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி தொடக்கம்

திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவார ஆற்றை தூர்வாரி ஆழப்படுத்தி, ரூ.150 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை கே.பி.சங்கர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். எண்ணூரில் பக்கிங்காம் கால்வாயுடன் இணைந்துள்ள முகத்துவார ஆற்றில் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம் போன்ற பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இறால், நண்டு, மீன் ஆகியவற்றை பிடித்து தொழில் செய்து வருகின்றனர்.

இந்த கால்வாயில் மணல்மேடுகளும் கழிவுகளும், சேறும் நிரம்பி ஆழம் குறைந்து காணப்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் உபரி நீர் முகத்துவார ஆற்றில் செல்ல முடியாததால் மீன்வளம் பாதிக்கப்படுவதோடு, மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இவை தவிர ஆற்றில் சேரும் கழிவுகளால் மீன்கள் அவ்வப்போது செத்து மிதக்கின்றன.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது, எண்ணூர் முகத்துவாரா ஆற்றை தூர்வாரி தூண்டில் வளைவு அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முகத்துவார ஆற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கே.பி.சங்கர் எம்எல்ஏ முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.  இதையடுத்து, இத்திட்டத்தை நீர்வளத் துறையின் மூலம் செயல்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உடனடியாக பணியை தொடங்கி விரைவாக முடிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி, முகத்துவாரத்தை தூர்வாரி ஆழப்படுத்தி அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி எண்ணூரில் நடந்தது. கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார். இதில் கவுன்சிலர்கள் கே.பி. சொக்கலிங்கம், சிவக்குமார், கோமதி சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: