திருவள்ளூர் வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் பேருந்து நிலையம் அமைக்க அரசாணை பிறப்பித்த முதல்வருக்கு நன்றி: நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில்  நடைபெற்றது. நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், வி.சுமித்ரா வெங்கடேசன், பி.நீலாவதி பன்னீர்செல்வம், அம்பிகா ராஜசேகர், கு.பிரபாகரன், ஆர்.பிரபு, கோ.சாந்தி கோபி, த.அயூப் அலி, டி.கே.பாபு, வி.இ.ஜான், ஜி.ஆர்.ராஜ்குமார், பத்மாவதி தர், அருணா ஜெய்கிருஷ்ணன், டி.செல்வகுமார், இந்திரா பரசுராமன், வி.சீனிவாசன், ஹேமலதா நரேஷ், ஜி.கந்தசாமி, ஆர்.விஜயகுமார், கமலி மணிகண்டன், வி.சித்ரா விஸ்வநாதன், ஆனந்தி சந்திரசேகர், எல்.செந்தில்குமார், க.விஜயலட்சுமி கண்ணன், எஸ்.தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கொசுத் தொல்லையை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. அதே போல் ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறிந்து அகற்றிடவும் நகரமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பேசிய நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், திருவள்ளூர் நகராட்சியை ஒட்டிய வேடங்கிநல்லூர் கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்திட ரூ. 33 கோடி நிதி அளித்து அரசாணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே போல் பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் பூண்டி ஒன்றியம் சிறுவானூர் பஞ்சாயத்திற்குபட்ட வேடங்கி நல்லூர் கிராமத்தில் உள்ளதால், திருவள்ளூர் நகர எல்லையினை சிறுவானூர் கிராமத்தில் பேருந்து நிலையம் அமையும் இடம் வரை விரிவாக்கம் செய்ய இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரப் பணிகளான நீர்த்த சுண்ணாம்பு மற்றும் பிளீச்சிங் பவுடர் 2023 - 24 - ம் ஆண்டிற்கு கொள்முதல் செய்ய ரூ.9.90 லட்சமும், கபசுரக்குடிநீர், நிலவேம்பு பவுடர் கொள்முதல் செய்ய ரூ.3 லட்சமும், டெமெஃபோஸ் கொள்முதல் செய்ய ரூ. 4 லட்சமும்,

மாலத்தியோன் டெக்னிக்கல் கிரேட் 95 கொள்முதல் செய்ய ரூ.4 லட்சமும், பேசிலஸ் துருஞ்சியான் சீஸ், கொசு புழுக்கொல்லி மருந்து கொள்முதல் செய்ய ரூ. 2 லட்சமும், தளம் மற்றும் சுவர்களில் கிருமி நீக்கம் செய்ய பயன்படுத்தப்படும் லெமன் கிராஸ் ஆயில் மற்றும் பிளாக் பெனி கொள்முதல் செய்ய ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.26.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், பொறியாளர் நாகராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சுதர்சன், வெயிலுமுத்து மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: