திருமானூர் அருகே டாஸ்மாக் கடையில் ரூ.4 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு

அரியலூர்.மே18: திருமானூர் அருகே டாஸ்மாக் கடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள இலந்தைகூடம்-அரண்மனைக்குறிச்சி சாலையில் வயல் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடிந்து 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு விற்பனையாளர் அன்பழகன், மேற்பார்வையாளர் வெங்கடாசலம் சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று காலை மதுபான கடை பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு, அவ்வழியே வந்தவர்கள் திருமானூர் போலீசாருக்கும், விற்பனையாளருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்ற திருமானூர் போலீசார் மற்றும் டிஎஸ்பி சிவமணி ஆகியோர் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்தனர்.

பின்னர், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். வரவழைக்கப்பட்ட மோப்பநாய் சுமார் 200 மீட்டர் தூரம் கிழக்கு நோக்கி சென்று நின்று விட்டது. விசாரணையில், டாஸ்மாக் கடையில் இருந்த 48 குவாட்டர் பாட்டில்கள் அடங்கிய 80 பெட்டிகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது. தொடர்ந்து மதுபானக்கடையை மாவட்ட மேலாளர் ராஜேந்திரன் பார்வையிட்டார். தொடர்ந்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன

Related Stories: