சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி வாய்க்காலை தூர்வார வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி ஊராட்சியில் உள்ள வீராணம் ஏரியின் பாசன வாய்க்காலான பூதங்குடி வாய்க்கால் சிதம்பரம் பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வாய்க்கால் மூலமாக 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த வாய்க்காலை சரிவர பராமரிக்காததால் சம்பு செடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது.

இதனால் பாசன வாய்க்காலில் தண்ணீர் எளிதாக செல்லாமல் தேக்கமடைந்து வருகிறது. மேலும் வீராணம் ஏரியின் உள்ளே கரையோரம் சமூக விரோதிகள் சிலர் குப்பை மற்றும் மாட்டு சாணத்தை கொட்டி ஏரியின் எழில்மிகு தோற்றத்தை சீரழித்து வருகின்றனர். இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பூதங்குடி வாய்க்காலை கடந்த அதிமுக ஆட்சியின் போது பெயரளவுக்கு தூர்வாரியதால் வாய்க்கால் மீண்டும் தூர்ந்து போய் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் வரும் கோடை நாட்களில் முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: