2-1 என ஒரு நாள் தொடரை இழந்ததால் தரவரிசையில் முதல் இடத்தை இழந்த இந்தியா: ஆஸ்திரேலியா நம்பர் 1 இடத்தை பிடித்தது

சென்னை: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவரில் 269 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47, அலெக்ஸ் கேரி 38, மிட்செல் மார்ஷ் 33 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 49.1 ஓவரில் 248 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 2-1 என தொடரை கைப்பற்றியது. ஆடம் ஸம்பா ஆட்டநாயகன் விருதும், மிட்செல் மார்ஷ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: இது சேஸ் செய்ய முடியாத அதிக ரன் என்று நான் நினைக்கவில்லை. 2வது பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்ய கொஞ்சம் சவாலாக இருந்தது. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை.

பார்ட்னர்ஷிப் அவசியம் இன்று நாங்கள் அதை செய்ய தவறி விட்டோம். நீங்கள் இந்த மாதிரியான விக்கெட்டுகளிலேயே பிறந்து வளர்ந்து உள்ளீர்கள். ஆனாலும் இந்த மாதிரி முறையில் ஆட்டம் இழப்பது சரி இல்லை. மிடில் வரிசையில் சிறப்பாக விளையாடியவர்கள் கடைசிவரை களத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஜனவரியில் இருந்து நாங்கள் ஒன்பது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் விளையாடியுள்ளோம். அதிலிருந்த நல்ல பாசிட்டிவான விஷயங்களை நாங்கள் எடுத்துக் கொள்வோம், என்றார். இதனிடையே ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையிலும் முதல் இடத்தை இழந்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 113 புள்ளிகள் பெற்றுள்ள போதிலும், தசம புள்ளி வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.

பவுலர்களின் பேட்டிங்தான் திருப்புமுனை

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீஸ் ஸ்மித் அளித்த பேட்டி: ``இது ஒரு மகிழ்ச்சியான சுற்றுப்பயணம். டெல்லி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு நாங்கள் போராடிய விதம் அருமையானது. இன்னமும் நாங்கள் எங்களுடைய பெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடவில்லை. பேட்டர்கள் சிலர் சிறப்பாக செயல்பட்டனர். ஸ்பின்னர்களும் அழுத்தங்களை ஏற்படுத்தி அசத்தினர். இப்போட்டியில் திருப்புமுனை என்பது. பீல்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு, சிங்கில்களை தடுத்து அழுத்தங்களை ஏற்படுத்தினோம். அடுத்து, டெய்ல் என்டர்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதுதான் திருப்புமுனையாக இருந்தது. இல்லையென்றால் 220 ரன்னே எடுத்திருப்போம். எனக் கூறினார்.

Related Stories: