அப்போ 109.5, இப்போ 70.69 டாலர் பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்காதது ஏன்?: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி; கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்காதது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் கூறியதாவது: நாடு முழுவதும் கடைசியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் 2022ம் ஆண்டு மே 21ம் தேதி நடந்தது. அப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை  109.5 டாலராக இருந்தது. ஆனால் 2023 மார்ச் 20ம் தேதி கச்சா எண்ணெய் விலை 70.69 ஆக குறைந்து விட்டது.  

சர்வதேச சந்தையில் கடந்த 305 நாட்களில் கச்சா எண்ணெய் விலை  லிட்டருக்கு ரூ. 16.7 குறைந்துள்ளது. அதே பலன் நுகர்வோருக்கு மாற்றப்பட்டால், கலால் வரி குறைக்கப்படாமல்  பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டின் விலையும் லிட்டருக்கு 16.7 ரூபாய் குறையும். ஆனால் இன்று வரை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. மலிவான ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி  செய்யப்பட்ட பிறகும் அதன் பயனைப்பெறுவது யார்? பொதுத்துறை சுத்திகரிப்பு நிலையங்களைத் தவிர, இந்தியாவில் ரஷ்ய எண்ணெய்யை  தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வாங்குகின்றன. இந்த நிறுவனங்கள் மலிவான எண்ணெய்யை வாங்கி, சுத்திகரித்து விற்கின்றன. ஆனால் பலன் மக்களுக்கு மட்டும் கிடைக்கவில்லை. ஆனால் மலிவான ரஷ்ய கச்சா எண்ணெய்யால்  அனைத்து தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களும் பயன் அடைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: