கர்நாடக பாஜ தலைவர் பாபுராவ் சிஞ்சன்சூர் காங்கிரசில் இணைந்தார்

பெங்களூரூ: கர்நாடக பாஜ தலைவராக இருந்த பாபுராவ் சிஞ்சன்சூர் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். 2013 முதல் 2018 வரை சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரசில் அமைச்சராகவும், 2008 முதல் 2018 வரை கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டம் குர்மித்கல் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராகவும் பாபுராவ் சிஞ்சன்சூர் பதவி வகித்து வந்தார். 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்ற அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார்.

2019 மக்களவை தேர்தலில் கல்புர்கி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவை தோற்கடிப்பதில் சிஞ்சன்சூர் முக்கியப் பங்காற்றினார். கல்யாண கர்நாடகா பகுதியில் உள்ள கோலி கபாலிகா சமூகத்தின் முக்கிய தலைவரான பாபுராவ் சிஞ்சன்சூர், 2 நாட்களுக்கு முன் தன் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவர் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.

இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறும்போது, “புத்தாண்டு தினமான உகாதியில் காங்கிரசில் இணைய பாபுராவ் விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி அவர், கார்கே தலைமை மீது நம்பிக்கை வைத்து மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார். அவரை காங்கிரஸ் வரவேற்கிறது” என்றார். காங்கிரசில் சேர்ந்த பிறகு பேசிய பாபுராவ் சிஞ்சன்சூர், “கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் கல்யாண கர்நாடகா பகுதியில் காங்கிரஸ் நிச்சயம் 20 முதல் 25 இடங்களில் வெற்றி பெறும். இந்த பகுதியில் என் பலத்தை நிரூபிப்பேன் ” என்றார்.

Related Stories: