அதிகரித்து வரும் கொரோனா தொற்று பிரதமர் மோடி அவசர ஆலோசனை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாடுமுழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தினார். இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. எக்ஸ்பிபி.1.16 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. 138 நாட்களுக்கு பிறகு நேற்று 1,134 பேருக்கு புதிதாக தொற்று பரவியது. இதனால் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 7026ஆக உயர்ந்தது.

நேற்று மட்டும் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள். இதனால் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,30,813ஆக உயர்ந்து விட்டது. இன்புளூயன்சா வைரசுடன் சேர்ந்து கொரோனா தொற்றும் பரவி வருவதால் மாநில அரசுகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசு உஷார்படுத்தியது. மருத்துவ கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று கொரோனா பரவும் வேகம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தற்போதைய கொரோனா தொற்று பரவும் வேகம் குறித்து அதிகரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

அதை தொடர்ந்து அவர் கூறுகையில்,’ தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா, இன்புளூயன்சா உள்ளிட்ட அனைத்து கடுமையான சுவாச நோய் குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். புதிய வகை தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மரபணு சோதனையை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பரவலை தடுக்க நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட மாதிரிகளின் மரபணு வரிசைமுறையை கண்டறிய வேண்டும். இது புதிய மாறுபாடுகளை கண்காணிக்க உதவும். மேலும் புதிய வகை உருமாற்றம் இருந்தால் அதை கண்டறிய உதவும். சோதனை, கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி மற்றும் கொரோனா நடத்தை விதிமுறைகள் உள்ளிட்ட 5 விதிமுறைகளில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். நாடு முழுவதும் மருத்துவமனைகளில் போதுமான சுகாதார வசதிகள், படுக்கை, மருந்து வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

* பயப்பட தேவை இல்லை

டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் ரன்தீப்குலேரியா கூறுகையில்,’ புதிய வகை கொரோனா தற்போது பரவத்தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் பயப்பட தேவை இல்லை. நோய் கடுமையாகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறக்கும் நிலை ஏற்படாதவரை பாதிப்பு இல்லை. ஏனென்றால் மக்களுக்கு லேசான நோய் பாதிப்பு இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெற வழிவகுக்கும். இருப்பினும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பதைக் கண்டறிய கண்காணிப்பு தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: