தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை அறிவிப்புகளை பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்த்திட நடவடிக்கை..!

சென்னை: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2023-2024-ஆம் ஆண்டு அறிவிப்புகளை பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொண்டுசேர்த்திட செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 2023-2024-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் 20.03.2023-அன்றும், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கான நிதிநிலை அறிக்கை 21.03.2023-அன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்து அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்த்திடும் வகையில் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் நிதிநிலை அறிக்கை தொடர்பான முக்கிய செய்திகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல, சமூக ஊடகங்கள் வாயிலாக பெருவாரியான மக்களைச் சென்றடையும் நோக்கில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. குறிப்பாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பத்திரப் பதிவுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அலுவலர்களை ஒருங்கிணைத்திட ஏதுவாக துறைக்கு ஒரு பொறுப்பு அலுவலர் (Nodal officer) நியமிக்கப்பட்டு கட்புலனக் குழு (Whatsapp group) ஏற்படுத்தப்பட்டது.

மேலும், அனைத்து அரசுத் துறைகளின் சார்பாக செயல்பட்டு வரும் கட்புலனக் குழுக்கள் (Whatsapp group) குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதேபோல, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மிக முக்கிய பிரமுகர்களின் ட்விட்டர், முகநூல், டெலிகிராம், இன்ஸ்ட்டாகிராம், யூ-டியூப் போன்ற சமூக ஊடக பக்கங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றின் மூலம் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் பொது மக்களுக்கு சென்று சேரும் வகையில் எளிய வடிவிலான சமூக ஊடக அட்டைகளாக (Social Media Cards) வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இத்தகைய சமூக ஊடக அட்டைகள் அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள், வலைத்தளங்களில் பகிர்ந்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மாவட்டங்கள் அளவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மூலமாக மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலுள்ள குழுக்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் பகிரப்பட்டது. அதன்மூலம், மாநில அளவில் அனைத்து தரப்பு  பொதுமக்களுக்கும் அரசின் அறிவிப்புகள் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் செய்திமக்கள் தொடர்பு அலுவலர்கள் மூலம் களவிளம்பர வீடியோ வாகனங்கள் வாயிலாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது.

அதேபோல, தமிழ் இணைய கல்விக்கழகம் ஒருங்கிணைப்போடு தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின் முக்கியம்சங்கள் தொடர்பாக சிறு குறிப்புகளாக 40 துணுக்குகள் தயாரிக்கப்பட்டு பகிரப்பட்டன. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம் அமைத்தல் போன்ற அறிவிப்புகள் தொடர்பாக 5 கட்டுரைகள் தயாரிக்கப்பட்டு அச்சு ஊடகங்களுக்குப் பகிரப்பட்டன.

மேலும், புதிய திட்டம் அறிவிப்புகள் தொடர்பாக முக்கிய பிரமுகர்கள், சமூக ஆளுமை பெற்ற நபர்கள், பொதுமக்கள், பயனாளிகளிடம் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் யூ-டியூப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பகிர்ந்து விளம்பர பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதவிர தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஒருங்கிணைப்போடு புதிய திட்டம் அறிவிப்புகள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு கைபேசி குறுஞ்செய்திகளாக (SMS) அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 20.03.2023-அன்று மட்டும் 5 கோடியே 23 லட்சம் பொதுமக்களுக்கு குறுஞ்செய்திகள் சென்றடைந்துள்ளன.

Related Stories: