ஆவடி மாநகர திமுக சார்பில் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சா.மு.நாசர், திண்டுக்கல் லியோனி பங்கேற்பு

ஆவடி: ஆவடி மாநகர திமுக சார்பில் நடந்த முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் சா.மு.நாசர், திண்டுக்கல் லியோனி பங்கேற்று 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். திருவள்ளூர் மத்திய  மாவட்டம் ஆவடி மாநகர திமுக சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பட்டாபிராமில் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் கலந்துகொண்டு 2000 பேருக்கு தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, எவர்சில்வர் குடம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது, அமைச்சர் சா.மு.நாசர் பேசுகையில், ‘திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்களில் தமிழ்நாட்டில்  ரூ.62 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதையடுத்து திண்டுக்கல் லியோனி பேசுகையில்,’முதியோர்களை மகிழ்ச்சியாக வைத்துகொள்ளும் ஆட்சி, பெண்கள் முன்னேற்றமடைய வைக்கும் ஆட்சி, குழந்தைகளை கல்வி கற்கவைக்கும் ஆட்சி நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி. நல்ல ஆட்சி மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரையும் மதவேறுபாடின்றி ஒன்றுபடுத்தி  மதவெறி கூட்டத்தை நாட்டைவிட்டே விரட்டப்போகும் ஆட்சி’ என்றார். நிகழ்ச்சியில், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகர மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகர செயலாளர் சன்பிரகாஷ், ஆவடி பகுதி செயலாளர்கள் பொன்.விஜயன், ஜி.ராஜேந்திரன், மண்டலக்குழு தலைவர்கள் அமுதா பேபி சேகர், ஜோதிலட்சுமி, அம்மு, கு.சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: