எம்மதமும் சம்மதம் என்று நினைப்பதுதான் திமுக: கொளத்தூரில் அமைச்சர் பொன்முடி பேச்சு

பெரம்பூர்: எம்மதமும் சம்மதம் என்று நினைப்பவர்கள்தான் திமுகவினர் என்று கொளத்தூரில் நடந்த முதல்வர் பிறந்தநாள் விழாவில், அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை  முன்னிட்டு ‘‘நேர்பட பேசுவோம் நீதியை வாழ்த்துவோம்” என்ற தலைப்பில் வாழ்த்தரங்கம் கொளத்தூர் மேற்கு பகுதி முத்தமிழ்நகரில் மாவட்ட துணை செயலாளர் தேவஜவகர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு வாழ்த்தரங்கத்தை   தொடங்கி வைத்தார். இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். எழுத்தாளர்கள் அருணன், ஆழி செந்தில்நாதன், மூத்த ஊடகவியலாளர்கள் ஆர்.மணி, லட்சுமி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

அமைச்சர் பொன்முடி பேசியதாவது: கலைஞர் சொன்னார், ‘சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்’ என்று. ஆனால் நம்முடைய முதலமைச்சர் சொல்கிறார், ‘சொன்னதை செய்வோம்; சொல்லாததையும் செய்வோம்’ என்று. இதற்கு மக்களை தேடி மருத்துவம், காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம். அரசு பள்ளிகளில் படித்துவிட்டு உயர்கல்வி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கும் முதலமைச்சர், இந்த நாட்டிலேயே நம்முடைய முதலமைச்சர் மட்டும்தான். பெரியாரின் வழியில் பெண் கல்வியை வளர்த்தெடுக்க இப்படி முனைப்போடு பணியாற்றி வருகிறார். முதலமைச்சரை பார்த்தால் 70 வயது போலவா தெரிகிறது, இன்றைக்கும்கூட நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும்  பொது மற்றும் வேளாண் அறிக்கையை தயாரிக்கும் பணிக்கான ஆய்வு கூட்டங்களைகூட மாலை 6 மணிக்கு மேலும் தலைமை செயலகத்தில் இருந்து  நடத்தினார். அவரது உழைப்புக்கு நல்ல பலனை கொடுக்க 2024ம் ஆண்டு தேர்தலில் மக்கள் அனைவரும் அவரது பக்கம் நிற்கவேண்டும்.

எங்களை பார்த்து இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று கூறுவதா... முன்பு கோயிலுக்கு உள்ளேயே செல்ல முடியாத நிலை இருந்ததை மாற்றி இன்று எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என மாற்றியது இந்த ஆட்சி. எங்களை பார்த்து இந்து மதத்திற்கு எதிரி என்று சொல்லலாமா... எம்மதமும் சம்மதம்... என்று நினைப்பவர்கள்தான் நாம்.  எந்த சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரும் மனிதர்களாக வாழவேண்டும் என்ற உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ளதையும் நிறை வேற்றுவோம் என முதலமைச்சரே தெரிவித்திருக்கிறார். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள்தானே ஆகிறது. வாக்குறுதிகள் அனைத்தையும் 5 ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றுவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார். நிகழ்ச்சியில், மண்டலக்குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், வழக்கறிஞர்கள் சந்துரு, துரைக்கண்ணு மற்றும் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: