மகளிர் பிரீமியர் லீக்: எலிமினேட்டர் போட்டியில் 24ம் தேதி மும்பை-உபி வாரியர்ஸ் மோதல்.! முதலிடம் பிடித்த டெல்லி நேரடியாக பைனலுக்கு தகுதி

மும்பை: 5 அணிகள் பங்கேற்ற முதலாவது மகளிர் பிரீமியர் லீக் டி.20 தொடரில் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிந்தது. நேற்றிரவு நடந்த கடைசி லீக போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்-உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த உபி. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன் எடுத்தது. அதிகபட்சமாக தாலியா மெக்ராத் நாட் அவுட்டாக 58 ரன் ( 32 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் அலிசா ஹீலி 36 ரன் எடுத்தனர்.

டெல்லி பவுலிங்கில் ஆலிஸ் கேப்ஸி 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய டெல்லி அணியில் துவக்க வீராங்கனை ஷெபாலி வர்மா 21, அடுத்து வந்த ஜெமிமா 3, மெக் லானிங் 39 , அலீஸ் கேப்சி 34 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, மரிசேன் காப் 34ரன் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 17.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன் எடுத்த டெல்லி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  அலீஸ் கேப்சி ஆட்டநாயகி விருது பெற்றார்.

8வது போட்டியில் 6வது வெற்றியை பெற்ற டெல்லி, பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்றது. மும்பையும் 6 வெற்றிகளை பெற்றபோதிலும் ரன்ரேட் அடிப்படையில் டெல்லிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. நாளை மறுநாள்(24ம் தேதி) இரவு 7.30 மணிக்கு டிஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் 2வது இடம் பிடித்த மும்பை இந்தியன்சும், 3ம் இடம் பிடித்த உபி.வாரியர்சும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பைனலில் 26ம் தேதி டெல்லியுடன் மோதும்.

Related Stories: