தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் மிளகாய் மண்டலமாக ராமநாதபுரம் மாவட்டம் அறிவிப்பு-விவசாயிகள், வியாபாரிகள் வரவேற்பு

ராமநாதபுரம் : தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் ராமநாதபுரம் மாவட்டம் மிளகாய் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மிளகாய் சாகுபடி, வர்த்தகம் மற்றும் மிளகாய் தொடர்பான கூட்டுப்பொருட்கள் உற்பத்தி ஏற்றம் பெறும் என விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி, பனைமரத் தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த மாதம் ஒன்றிய அரசு சார்பில் ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவீசார் குறியீடு வழங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில், ராமநாதபுரம் மாவட்டம் மிளகாய் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்ைத சேர்ந்த விவசாயிகள், வர்த்தகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் காய்ந்த மிளகாய் (வத்தல்) 28 ஆயிரத்து 468 டன். இதில் இரண்டு மடங்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் (விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி சேர்த்து) மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால், மிளகாய் உற்பத்தியில் ராமநாதபுரம் முதன்மை மாவட்டமாக உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ஏற்றுமதியாகும் மிளகாய் வத்தலை கொண்டு தயாரிக்கப்படும் மிளகாய் தூள், மிளகாய் சாஸ், மிளகாய் எண்ணெய், ஊறுகாய் வகைகள் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களுக்கு சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இலங்கை, சீனா, அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா, துபாய், கத்தார் உள்ளிட்ட நாடுகளிலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் அதிக வரவேற்பு உள்ளது.

இதனால் மாவட்டத்தில் 47 ஆயிரம் ஏக்கரில் மானவாரியாகவும், சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் இறைவை சாகுபடியாகவும் (போர்வெல், கிணறு) மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. அருகிலுள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளையான்குடி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விளாத்திக்குளம், விருதுநகர் மாவட்டம் பரளச்சி உள்ளிட்ட பகுதிகளும் மிளகாய் வர்த்தகத்தில் ராமநாதபுரம் சந்தையில் சேர்வதால், மாவட்ட அளவில் ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரம் டன் வரை காய்ந்த மிளகாய் (வத்தல்) கிடைக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் ராமநாதபுரம் மாவட்டம் மிளகாய் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதனால் மிளகாய் சாகுபடி, வர்த்தகம் மற்றும் மிளகாய் தொடர்பான கூட்டுப்பொருட்கள் உற்பத்தி ஏற்றம் பெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை விவசாயி ராமர் (கமுதி, கோரைப்பள்ளம்): ராமநாதபுரம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் மிளகாய் வணிக வளாகத்தில் ரூ.13 கோடியில் கட்டப்பட்ட 65 வணிகக் கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார். தொடர்ந்து ராம்நாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவீசார் குறியீடு வழங்க, ஒன்றிய அரசை வலியுறுத்தி, பெற்றும் தந்தார்.

இந்த நிலையில் வேளாண் பட்ஜெட்டில் விதை நாற்றுகள், இடுபொருட்கள் வழங்குதல், மிளகாயை பதப்படுத்தி, மதிப்பு கூட்டுதல் பொருள் செய்யும் கூடம், சோலார் உலர்த்தி கூடம், காய வைக்க உலர் பாய் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தை மிளகாய் மண்டலமாக அறிவித்தில் மிகுந்த மகிழ்ச்சி. இதனால் மிளகாய் விவசாயம் மேலும் விரிவடையும். வணிக ரீதியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் விவசாயிகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோருக்கு நல்ல பலன் கிடைக்கும்.

விவசாயி பாலமுருகன் (கடலாடி): ராமநாதபுரம் மாவட்டத்தில் மானவாரி விவசாயம் மட்டுமே செய்யப்படுகிறது, பருவமழை பெய்ய தவறினால், குறைந்தால் விவசாயம் பொய்த்து விடும், கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியால் பெரும்பாலான நிலங்கள், தரிசு நிலங்களாக விடப்பட்டன. அங்கு சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த நிலையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலங்களை சீரமைத்து சிறுதானியங்கள் பயிரிடுவதற்கும், போர்வெல் அமைப்பதற்குமான வசதிகளை அரசு வழங்கியது. தற்போது வேளாண் பட்ெஜட்டில் இலவச மின்சாரத்திற்கு கூடுதல் நிதி, பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.2,337 கோடி, சாகுபடி காலத்தில் ரூ.14 ஆயிரம் கோடியில் பயிர்கடன். கால்நடை, மீன் வளர்ப்பிற்கு வட்டியில்லாத கடனாக ரூ.1,500 கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்கும் உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கதக்கதாக உள்ளன.

விவசாயி மாரிமுத்து (பரமக்குடி): கடந்த காலங்களில் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தும் நடைமுறைப்படுத்தாத நிலையில், தற்போது திமுக ஆட்சியில் மிளகாய் மண்டலமாக ராமநாதபுரம் மாவட்டத்தை  அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பு ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் விவசாயிகளுக்கு பெரிய வரப்பிரசாதம்.

விவசாயி மணிகண்டன் (செங்காலன்வயல்): பட்ஜெட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தை மிளகாய் மண்டலமாக அறிவித்தது மகிழ்ச்சியாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.மங்கலம் மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்தது. வறட்சியான மாவட்டத்தை இந்த அறிவிப்பு நிச்சயம் வளமான பாதைக்கு கொண்டு செல்லும்.

பனை விவசாயிகளுக்கு ரூ.2 கோடி நிதி

பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேளாண் பட்ஜெட்டில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் வரவேற்றுள்ளனர். சாயல்குடி பகுதியை சேர்ந்த பனை மரத் தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 15 லட்சம் பனை மரங்கள் உள்ளன. சுமார் 2 லட்சம் குடும்பங்கள் பனை மரம் தொழில் மற்றும் பனைமரம் சார்ந்த உப தொழில் செய்து வருகின்றனர். கன்னிராஜபுரம் தொடங்கி திருப்புல்லாணி, ராமேஸ்வரம், தொண்டி வரையிலும் இத்தொழில் சிறப்பாக நடந்து வருகிறது.

பனை சீவுதல், பதனீர் இறக்குதல், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிப்பு, வேலிக்கு பனைமட்டை சீவுதல், நார் பிரித்தெடுத்தல், கயிறு உற்பத்தி, கருப்பட்டி, பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்தாண்டு வேளாண் பட்ஜெட்டில் ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை, ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு திட்டம், பனை மரங்களை வெட்டுவதற்கு கலெக்டரின் அனுமதி, 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனைவிதைகள் விநியோகம், 1 லட்சம் பனை மரக்கன்று முழு மானியத்தில் வழங்க நடவடிக்கை, பனைவெல்லம் தயாரிக்க பயிற்சி, குளம், ஏரிக்கரை, சாலையோரம் வளர்த்தல், கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய மானியம் உள்ளிட்ட திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. தற்போதைய பட்ஜெட்டில் பனை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பனைமரத் தொழிலாளர்களின் வாழ்வு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: