நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய இருவர் கைது பணிப்பெண்ணிடம் இருந்து 100 சவரன் பறிமுதல்: நகையை வங்கியில் விற்பனை செய்து வீட்டு மனை வாங்கியது அம்பலம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கம், வைரம், நவரத்தின நகைகளை திருடிய வேலைக்கார பெண், கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். பணிப்பெண்ணிடம் இருந்து 100 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் ராகவீரா அவென்யூவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா (41) தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இயக்குநரான இவர், கடந்த மாதம் 27ம் தேதி ேதனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார்.

அதில், கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐஸ்வர்யா தனது தங்கை திருமணத்திற்கு தங்கம், வைர நகைகள், நவரத்தின நகைகளை அணிந்து, பிறகு தனது வீட்டில் உள்ள லாக்கரில் அனைத்து நகைகளையும் வைத்துள்ளார். அதன் பிறகு செயின்ட் மேரி சாலையில் உள்ள வீடு, பின்னர் சிஐடி காலனியில் உள்ள தனது கணவர் தனுஷ் வீட்டிற்கு நகைகள் உள்ள லாக்கர் மாற்றப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு மீண்டும் செயின்ட் மேரி சாலையில் உள்ள குடியிருப்புக்கும், கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி தனது போயஸ் கார்டனில் உள்ள வீட்டிற்கும் லாக்கர் மாற்றப்பட்டது.

இந்த லாக்கர் சாவி தனது ஊழியர்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் டிரைவர் வெங்கட் ஆகியோருக்கு நன்றாக தெரியும். நான் வீட்டில் இல்லாத போது, அவர்கள் தான் வீட்டிற்கு சென்று பணிகளை செய்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 10ம் தேதி தனது லாக்கரை திறந்து நகைகளை சரிபார்த்த போது, அதில் இருந்து 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், நவரத்தின நகைகள் மட்டும் மாயமாகி இருந்தது. லாக்கர் உடைக்கப்படாத நிலையில் நகைகள் மட்டும் மாயமாகி இருப்பதால் 3 ஊழியர்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே அவர்களிடம் விசாரணை நடத்தி எனது நகைகளை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் படி தேனாம்பேட்டை போலீசார் ஐபிசி 381 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஐஸ்வர்யா வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஈஸ்வரி மற்றும் லட்சுமி, கார் டிரைவர் வெங்கட் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது மந்தைவெளி பகுதியில் வசித்து வரும் ஈஸ்வரி (40) மட்டும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தானாகவே வேலையில் இருந்து நின்றது தெரியவந்தது. ஈஸ்வரியை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர், கார் டிரைவர் வெட்கட் என்பருடன் சேர்ந்து ஐஸ்வர்யா வீட்டில் இருந்து நகைகளை திருடியது தெரியவந்தது.

அதைதொடர்ந்து வேலைக்கார பெண் ஈஸ்வரி, கார் டிரைவர் வெங்கட் ஆகியோரை போலீசார் கைது ெசய்தனர். ஈஸ்வரியிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  ஈஸ்வரி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: மந்தைவெளி பகுதியை சேர்ந்த ஈஸ்வரிக்கு கணவர் அங்கமுத்து மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கணவருக்கு சரியாக வேலை இல்லாததால் குடும்ப வருமை காரணமாகவும், 3 பெண்கள் படிப்பு செலவுகளுக்காக தெரிந்தவர்கள் மூலம் கடந்த 2019ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வேலைக்கு பணிப்பெண்ணாக ஈஸ்வரி சேர்ந்துள்ளார். வேலைக்கு சேர்ந்த பிறகு, ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி, மகள்களிடம் நன்மதிப்பை ஈஸ்வரி பெற்றுள்ளார். இதனால் ஈஸ்வரியை அவர்கள் வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கு சென்றும் பணிகள் செய்ய அனுமதி அளித்துள்ளனர். அப்போது ஐஸ்வர்யா அறையில் உள்ள லாக்கரில் நகைகள் இருப்பதை தெரிந்து கொண்டார்.

பணிக்கு சேர்ந்த சில மாதங்களில் லாக்கர் சாவியை எடுத்து சிறிய அளவு நகையை திருடியுள்ளார். திருடிய நகைகள் குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. இதனால் ஈஸ்வரி தனது கணவர் அங்கமுத்து உடன் சேர்ந்து திட்டமிட்டு கடந்த 2019ம் ஆண்டு வங்கியில் லோன் மூலம் சோழிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்தற்கு நிலம் வாங்கியுள்ளார். அதற்கு மாதம் ரூ.35 ஆயிரம் வரை பணம் வங்கிக்கு கட்ட வேண்டி இருந்தது. வங்கியில் வாங்கிய கடனை கட்ட வேண்டி ஈஸ்வரி, ஐஸ்வர்யாவின் லாக்கரில் இருந்து தங்கம், வைரம், நவரத்தின நகைகளை சிறுக சிறுக திருடி, அதை தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் விற்பனை செய்து அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். அதன் பிறகு வங்கியில் வாங்கிய ரூ.95 லட்சம் கடனை, 2 ஆண்டுகளிலேயே கட்டி முடித்துள்ளார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராமல், கடந்த 6 மாதத்திற்கு முன்பு, தனது மூன்று மகள்களை சரியாக கவனிக்க முடியவில்லை என்று கூறி வேலையில் இருந்து நின்றுள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

* சிக்கியது எப்படி? புகாரின் பேரில் போலீசார், பணிப்பெண் ஈஸ்வரி வீட்டிற்கு சென்றபோது, நல்ல வசதி வாய்ப்புடன் இருந்துள்ளார். ஏழ்மை நிலையில் இருந்த அவர், வேலையை விட்டு நின்ற பிறகும், வசதியுடன் வாழ்ந்து வந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து, ஈஸ்வரி மற்றும் அவரது கணவரின் வங்கி கணக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து நேரடியாக விசாரணை நடத்திய போது, ஐஸ்வர்யா வீட்டில் இல்லாத போது, அவரது லாக்கரில் இருந்து 60 சவரன் தங்க நகைகள், பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், நவரத்தின நகைகள் திருடியதை ஈஸ்வரி ஒப்புக்கொண்டார்.

Related Stories: