வேளாண் பட்ஜெட் 2023-24: விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது

அங்கக வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் ‘‘நம்மாழ்வார்’ பெயரில் விருது வழங்கப்படும். விருது ரூ.5 லட்சம் பணப்பரிசு, பாராட்டுப் பத்திரத்துடன் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

* ஒருங்கிணைந்த பண்ணையத்துக்கு ரூ.50 கோடி

வேளாண் தொடர்பான பணிகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் மேற்கொள்வதை ஊக்கப்படுத்துவது இன்றைய முக்கிய தேவை. இது நிலையான வருமானத்திற்கும், நீடித்த வருமானத்திற்கும் உதவுகின்ற ஒருங்கிணைந்த பண்ணையமாகும். இதை ஊக்குவிக்கும் வகையில் 50 ஆயிரம் ரூபாய் மானியத்தில் 10 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணையத் தொகுப்புகளுக்கு வரும் நிதியாண்டில் ரூ.50கோடி ஒதுக்கப்படும்.

* மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால்... அவையை குலுங்க வைத்த அமைச்சர்

வேளாண்மை பட்ஜெட் படித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது, “தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களான தூய மல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா, தங்க சம்பா, கீரை சம்பா ஆகியவற்றை பாதுகாத்து பரவலாக்கிட, நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில், 2021-22ம் ஆண்டு, 196 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்றே, இந்த ஆண்டும் அரசு விதை பண்ணைகளில், 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். இதற்கென ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதனால் எம்எல்ஏக்களும் பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டும். மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிட்டால் மாப்பிள்ளை மாதிரி இருக்கலாம் என்றார். இதைக்கேட்டு பேரவையில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் சிரித்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, “அமைச்சர் அனைத்து உறுப்பினர்களுக்கும் மாப்பிள்ளை சம்பா அரிசி வழங்கினால் நாங்களும் சாப்பிட தயாராக இருக்கிறோம்” என்றார். இதைக்கேட்டு அவையில் மீண்டும் சிரிப்பொலி எழுந்தது.

* கொப்பரை கொள்முதல்

ஒன்றிய அரசின் ‘விலை ஆதரவுத் திட்டம்’ தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.இத்திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில், 420 கோடி ரூபாய் மதிப்பிலான 40,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் 33,500 கொள்முதல் செய்யப்பட்டது. வரும் பருவத்தில், 640 கோடி மதிப்பிலான 56,000 மெட்ரிக் டன் கொப்பரையை ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்துடன் இணைந்து கொள்முதல் செய்யப்படும்.

* தொன்மை சார் உணவகங்கள்

தமிழ்நாட்டுக்கே உரிய தொன்மை மிக்க ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியக் கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகளை வழங்கவும், வருகிற நுகர்வோர்கள் அவற்றை அருந்தி, விழிப்புணர்வு பெறவும், முதல் கட்டமாக 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் உருவாக்கப்படும்.

* கடைமடைக்கும் பாசன நீர்

கடைமடைக்கும் பாசன நீர் செல்லும் வகையில் இந்த ஆண்டினைப் போலவே வரும் ஆண்டும் காவிரி, வெண்ணாறு வடிநிலப் பகுதியிலுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 2ம் கட்டமாக, 1,146 கி.மீ. நீளத்திற்கு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்களை தூர் வாரும் பணிகள், 1,32,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

* ரூ.25 கோடியில் வேளாண் இயந்திரங்கள் கொள்முதல்

டிராக்டர்கள், ரோட்டவேட்டர்கள், எந்திரக் கலப்பைகள், கரும்பு அறுவடை இயந்திரங்கள், நெல் அறுவடை இயந்திரங்கள் ரூ.25 கோடியில் கொள்முதல் செய்யப்பட்டு தேவைப்படும் விவசாயிகளுக்கு துறையின் இ-வாடகை செயலியின் மூலமாக குறைந்த வாடகைக்கு விடப்படும். மேலும், வட்டார அளவில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களில் வேளாண்மைப் பொறியியல் துறையின் அலுவலர்கள், வரும் ஆண்டிலிருந்து செயலாற்றிடும் வகையில் தற்போது வருவாய் கோட்ட அளவில் இயங்கி வரும் வேளாண்மைப் பொறியியல் துறையின் கட்டமைப்பு வட்டார அளவில் செயல்பட மறுசீரமைக்கப்படும்.

* நுண்ணீர் பாசனத்துக்கு ரூ.450 கோடி

பட்ஜெட் தாக்கலின் போது வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில்: நுண்ணீர் பாசன முறையைப் பின்பற்றி, நிலத்தடி நீரைத் திறம்பட பயன்படுத்தி, அதிக பரப்பை சாகுபடிக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டில் இத்திட்டத்திற்கான மொத்த நிதியான ரூ.744 கோடி நிதியில், சுமார் 60% நிதியான ரூ.450 கோடி இக்குறு வட்டங்களில் 53,400 எக்டர் பரப்பில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் ஏற்படுத்தப்படும். இதற்கு 5 எக்டரை 10 எக்டராக உயர்த்தவும் ஒரே நிலத்தில் மீண்டும் நுண்ணீர்ப் பாசனம் நிறுவுவதற்கான கால இடைவெளியை ஏழு ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாகக் குறைக்கவும் ஒன்றிய அரசை இவ்வரசு வலியுறுத்தும்.

* விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க குழு

தற்போது வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பது என்பது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, இத்தகைய வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பது, சட்டவிதிகளுக்கு உட்பட்டு, வனத்துறை மூலம் அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆராய்வதற்கு கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் தலைமையில் தனிக்குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழுவில், வனத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களும், விவசாயிகளும் இடம்பெறுவார்கள். இக்குழு, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, விவசாயிகளைச் சந்தித்து, சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்து, இதற்கான தீர்வு குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

* ரூ.15 கோடியில் 60,000 தொகுப்பு வேளாண் கருவிகள்

விவசாயிகளுக்கு உதவிடும் வகையில்  உழைப்புத்திறனை மேம்படுத்தி, வேளாண் பணிகளை எளிதில் செய்ய ஏதுவாக சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டில் ரூ.15 கோடி  நிதி ஒதுக்கீட்டில் 60,000 வேளாண் கருவிகள் தொகுப்பு விநியோகம் செய்யப்படும். குறிப்பாக, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 30,000 தொகுப்புகள் வழங்கப்படும்.

* ஆழ்துளை கிணறுகளுக்கு 600 புதிய மின் இணைப்பு

உழவர் பெருமக்களுடைய நீர்ப் பாசன வசதியை மேம்படுத்துவதற்காக 23 லட்சம் இலவச மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தேவையான கட்டணத் தொகையாக, சுமார் ரூ.6,536 கோடி நிதியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு அரசு வழங்கும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் தரிசுநில தொகுப்புகளில் அமைக்கப்படவுள்ள ஆழ்துளை, திறந்தவெளிக் கிணறுகளுக்கும், ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆழ்துளைக் கிணறுகளுக்கும் மொத்தம் 600 மின் இணைப்புநடப்பாண்டை போலவே வரும் ஆண்டிலும் வழங்கப்படும்.

* இயற்கை இடுபொருள் தயாரித்தல் மையம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு

இயற்கையான எருவைப் பயன்படுத்தி ரசாயன உரங்கள் இல்லாமல் வேளாண்மை செய்யும் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வண்ணம் முதல்வரால் தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, பாரம்பரிய வேளாண் வளர்ச்சி  திட்டத்தில் 32 மாவட்டங்களில், 14,500 எக்டர் பரப்பில், 725 தொகுப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க, சான்றுக்கட்டணத்திற்கு 10,000 எக்டருக்கு மானிய உதவி அளிக்கப்படும். வரும் ஆண்டில்  இதற்கென, 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அங்கக இடுபொருட்களான  பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மண்புழு உரம், அமிர்தக் கரைசல்,  மீன் அமிலம்  போன்றவற்றை தயாரித்து, விற்பனை செய்ய ஆர்வமுள்ள 100 உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரித்தல் மையம் அமைக்க ரூ. 1 லட்சம் வீதம் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Related Stories: