செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.5.5 கோடியில் கோயில் சிலைகளை கண்காணிக்க சிசிடிவி: இந்து சமய அறநிலையத்துறை அதிரடி

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 55 இந்து கோயில்களில் உள்ளன. இந்த கோயில்களில் உலோகச் சிலை, ஐம்பொன் மற்றும் தொன்மையான சிலைகள் திருடுபோகாமல் பாதுகாக்கும் வகையில், ரூ.5.5 கோடியில் பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டது. அதனுடன், சேர்த்து சிசிடிவி கேமரா, எச்சரிக்கை மணி பொருத்தி தீவிரமாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் பல ஆயிரம் சைவம், வைணவ கோயில்கள் மற்றும் பல அறக்கட்டளைகள் இயங்கி வருகின்றன. கோயில்களை பொறுத்தவரை ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் பல பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகிறது.

மேலும், இணை ஆணையர், உதவி ஆணையர், முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் நிலை செயல் அலுவலர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதேபோல், அறக்கட்டளைகளுக்கும் தனித்தனியே செயல் அலுவலர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் மூலவர் உள்ளிட்ட சாமி சிலைகள் அதிகப்படியாக கற்சிலைகளாகவே பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. உற்சவ சாமிகள் மட்டும் உலோகம், ஐம்பொன் சிலைகளாக உள்ளது. பெரும்பாலும், சைவ கோயில்களில் உற்சவர் சிலைகள் தனி அறைகளிலும், வைணவ கோயில்களில் உற்சவர் சிலைகள் மூலவர் சன்னதியிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில்களில், அப்போது கலை நயத்துடன் வடிக்கப்பட்ட சிலைகள் உள்ளன.

தற்போது, வசதி குறைந்த சிறிய அளவிலான  கோயில்களில் பக்தர்கள் அளிக்கும் நன்கொடையில் உற்சவர் சிலைகள் தற்காலத்திற்கு ஏற்றார்போல் வடித்து பயன்படுத்தப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பழங்கால சிலைகள் நாட்டின் முக்கிய கலை பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது. மேலும், பழங்கால சிலைகள் உலக நாடுகளின் சிலை ஆர்வலர்களை கவர்ந்து இழுக்கிறது. இச்சிலைகளை, பல கோடி ரூபாய்க்கு வாங்கவும் பல வெளிநாட்டு நிறுவனங்களும், சிலை ஆர்வலர்களும் முயற்சித்து வருகின்றனர். வெளிநாட்டினருக்கு விற்க சில சிலை திருட்டு கும்பல் பழமையான கோயில்களில் உள்ள பழங்கால சிலைகளை இந்து சமய அறநிலையை துறை அதிகாரிகள், ஊழியர்கள், முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் பிரபல ரவுடிகளின் உதவியுடன் கோயில்களுக்குள் அத்துமீறி நுழைந்து திருடி பல கோடி மதிப்புக்கு விற்கப்படுகிறது.

அவ்வாறு, திருடி விற்கப்பட்ட சிலைகளை மீட்க தமிழ்நாடு அரசும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், சில நேரங்களில் சிலை கடத்தல் கும்பலை கையும் களவுமாக போலீசார் பிடிக்கும்போது திருட்டு கும்பலை விடுவிக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும், திருட்டை தடுக்கும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தொடர்ந்த வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.

அப்போது, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கோர்ட்டில் நேரில் ஆஜராகி, சிலைகள் திருடு போகாத வகையில் பாதுகாக்க சிசிடிவி கேமரா, எச்சரிக்கை மணியுடன் கூடிய பாதுகாப்பு அறைகள் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக அறநிலைய துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு அறைகள் அமைக்க கடந்த ஆண்டு அப்போது இருந்த ஆணையர் குமரகுருபரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது, அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாத 55 இந்து கோயில்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை மணியுடன் கூடிய பாதுகாப்பு அறைகள் அமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலைய துறையை  செயல் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘செங்கல்பட்டு மாவட்டத்தில் பழங்கால சிலைகளை பாதுகாக்க முறையான பாதுகாப்பு இல்லாத இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 55 இந்து கோயில்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு சென்னை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, அக்கோயில்களில் இரும்பு கதவு, சிசிடிவி கேமரா, எச்சரிக்கை ஆகியவற்றுடன் கூடிய ரூ.5.5 கோடி மதிப்பில் பாதுகாப்பு அறைகளை அமைக்க ஆணையர் உத்தரவிட்டார். தொடர்ந்து, டெண்டர் விடும் பணி நடந்து வருகிறது. டெண்டர் விடும் பணி முழுமையாக முடிந்த பிறகு, விரைவில் பணி தொடங்கும் என்றார்.

* பாதுகாப்பு அறைகளை கண்காணிக்க கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சைவ மற்றும் வைணவ கோயில்களில் பழங்கால சிலைகளை பாதுகாக்க ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இரும்பு கதவு, சிசிடிவி கேமரா, எச்சரிக்கை மணி ஆகியவை அமைக்கப்பட உள்ளது. ஒதுக்கிய நிதியில் சரியாக வேலைகள் நடக்கிறதா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பததோடு, 24 மணி நேரம் சிசிடிவி கேமராக்கள் இயங்கும் வகையில் பாதுகாப்பு அறைகள் அமைக்க வேண்டும் என சிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆணையர் எச்சரிக்கை

பாதுகாப்பு அறைகள் கட்டும் பணியினை சரியாக பார்வையிடாவிட்டால் இழப்பீட்டு தொகை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று ஆணையர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.   55 கோயில்களில் மேற்கொள்ளும் பணிகளை இணை ஆணையர், உதவி ஆணையர், மண்டல செயற்பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர், உதவி செயற்பொறியாளர், இளம் பொறியாளர் கண்காணிக்க வேண்டும். இவற்றை, பின்பற்ற தவறினால் தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, இழப்பீட்டு தொகை அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* பாதுகாப்பு அறைகள் அமையும் கோயில்களின் விவரங்கள்

கிழக்கு தாம்பரம் கற்பக விநாயகர் மற்றும் சுந்தரப் பெருமானார் ரூ.10.75 லட்சம், மதுராந்தகம் பெரும்பேர் கண்டிகை கரிவரதராஜ பெருமாள் ரூ.7 லட்சம், செய்யூர் கரியமாணிக்க பெருமாள் ரூ.7 லட்சம், செய்யூர் கந்தசாமி கோயில் ரூ.8.50 லட்சம், மதுராந்தகம் பெரும்பேர் கண்டிகை ரூ.8.50 லட்சம், திருப்போரூர் அகரம் கைலாசநாதர் கோயில் ரூ.7.35 லட்சம், திருப்போரூ.ர் கோவளம் கைலாசநாதர் கோயில் ரூ.7.50 லட்சம், கட்டாங்கொளத்தூர் காளத்தீஸ்வரர் கோயில் ரூ.11.30 லட்சம், கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் ரூ.7 லட்சம், திருக்கழுக்குன்றம் வள்ளிபுரம் கால கண்டீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் ரூ.10.65 லட்சம், திருப்போரூர் ஆமூர் இறையாயிர முடையார் மற்றும் வைகுண்ட பெருமாள் வகையறா ரூ.7.50 லட்சம்.

மேலும், செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் ரூ.8.75 லட்சம், செய்யூர் ஊடல் காரக்குப்பம் ஜம்புகேஸ்வரர் ரூ.12.90 லட்சம், மதுராந்தகம் கருங்குழி ஞானகிரீஸ்வரர் ரூ.10.75 லட்சம், செய்யூர் கல்குளம் கோவிந்தராஜ பெருமாள் ரூ.7.35 லட்சம், மதுராந்தகம் வடபாதி பிரம்மபுரீஸ்வரர் ரூ.10.50 லட்சம், செங்கல்பட்டு பி.வி.களத்தூர் தருமராஜ கோயில் ரூ.8.25 லட்சம், குரோம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி ரூ..10.75 லட்சம், மேற்கு தாம்பரம் அருள் தந்த விநாயகர் ரூ..10.50 லட்சம், திருக்கழுக்குன்றம் ஆனூர் அஸ்திரபுரீஸ்வரர் ரூ..12.50 லட்சம், சென்னை அனகாபுத்தூர் அகத்தீஸ்வரர் வகையறா ரூ..6.90 லட்சம், செய்யூர் கொடூர் அகத்தீஸ்வரர் ரூ..10.50 லட்சம், வண்டலூர் புதுப்பாக்கம் அகத்தீஸ்வரர் ரூ..9 லட்சம், சென்னை பம்மல் அக்கீஸ்வரர் ரூ..12.50 லட்சம்,

வண்டலூர் நெடுங்குன்றம் அகத்தீஸ்வரர் ரூ..9 லட்சம், செய்யூர் கடுக்கலூர் ஆதிகேசவ பெருமாள் ரூ..7.60 லட்சம், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ரூ..33 லட்சம், செய்யூர் போந்தூர் ஆதிகேசவ பெருமாள் ரூ..7.48 லட்சம், செய்யூர் நெடுமரம் ஆதிகேசவ பெருமாள் ரூ..7.48 லட்சம், திருப்போரூர் நெல்லிக்குப்பம் ஆதிகேசவ பெருமாள் ரூ. 7 லட்சம், மேற்கு தாம்பரம் வினை தீர்த்த விநாயகர் ரூ..6.80 லட்சம், திருக்கழுக்குன்றம் மெய்யூர் வெள்ளீஸ்வரர் ரூ..10.50 லட்சம், செங்கல்பட்டு விஞ்சியம்பாக்கம் துலுக்காணத்தம்மன் ரூ..7.15 லட்சம், மதுராந்தகம் அரசர் கோயில் வரதராஜ பெருமாள் ரூ..11 லட்சம், செய்யூர் வால்மீகிநாதர் ரூ..17.25 லட்சம், செய்யூர் வால்மீகிநாதர் ரூ..17.25 லட்சம், திருப்போரூர் மானாம்பதி திருக்கரையீஸ்வரர் ரூ..13.60 லட்சம், செய்யூர்

கூவத்தூர் திருவாலீஸ்வரர் ரூ..9.20 லட்சம், சென்னை திரிசூலம் திரிசூல நாத சுவாமி ரூ..8.70 லட்சம், சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ரூ..13.60 லட்சம், செங்கல்பட்டு சுந்தரமூர்த்தி விநாயகர் ரூ..8.50 லட்சம், செய்யூர் கடப்பாக்கம் தீர்த்தகிரீஸ்வரர் ரூ..10.25 லட்சம், செய்யூர் கடப்பாக்கம் தீர்த்தகிரீஸ்வரர் ரூ..10.25 லட்சம், செய்யூர் பனையூர் சுந்தர வரதராஜ பெருமாள் ரூ..7.50 லட்சம், மேற்கு தாம்பரம் செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் ரூ..10.75 லட்சம், செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ரூ..10.50 லட்சம், திருப்போரூர் செங்கண்மால் செங்கண்மாலீஸ்வரர் ரூ..7.58 லட்சம், திருப்போரூர் தையூர் முருகீஸ்வரர் ரூ.8.80 லட்சம்,

செங்கல்பட்டு நந்திவரம் நந்தீஸ்வரர் ரூ..10.50 லட்சம், செங்கல்பட்டு மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர் ரூ..13.70 லட்சம், செங்கல்பட்டு திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் மற்றும் தியாகராஜ ஸ்வாமி ரூ..13.60 லட்சம், திருக்கழுக்குன்றம் சதுரங்கப்பட்டினம் மலை மண்டல பெருமாள் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் ரூ.13.70 லட்சம், திருக்கழுக்குன்றம் குழிப்பாந்தண்டலம் லட்சுமி நாராயண பெருமாள் ரூ.7.35 லட்சம் என மொத்தம் 55 கோயில்களுக்கு ரூ.. 5.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: