எச்3என்2 வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது கொரோனா அதிகரித்தாலும் பதற்றம் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: எச்3என்2 வைரஸ் காய்ச்சல் தமிழ்நாட்டில் கட்டுக்குள் உள்ளது. கொரோனா அதிகரித்தாலும் மக்கள் பதற்றப்பட தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் கோவிட் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், பொதுசுகாதாரம் மற்றும்  நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம்மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை செயலாளரிடமிருந்து  தமிழ்நாட்டிற்கு வந்த சுற்றறிக்கையில், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளது. தமிழகத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தினமும் தொற்று 2 என்கின்ற அளவில் இருந்தது. இறப்பும் கடந்த 9 மாதங்களாக ஒன்று, இரண்டு அளவிலேயே இருந்தது. தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும் கூடுதலாக உயர்ந்து கொண்டிருக்கும் ஒமைக்ரான் கூடுதல் வகைகளில் ஒன்றான உருமாற்றம் பெற்ற வைரஸ் பாதிப்பு இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்,தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை. இப்போது கோவிட் பாதிப்பு 76 ஆக உள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் இந்த தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக துபாய், சிங்கப்பூர் போன்ற வணிக ரீதியான நாடுகளிலிருந்து வருகின்ற மக்களிடத்தில் ரேண்டமாக 2 சதவீத பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்னால் அந்த 2 சதவீத பரிசோதனைகள் இரண்டு, மூன்று நபர்களுக்கு பாதிப்பு என்கின்ற வகையில் இருந்தது. கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு பாதிப்பு 6ஆக உயர்ந்து வருகிறது. மேலும் குவைத், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இந்த பாதிப்பு கூடியிருக்கிறது.

தமிழ்நாட்டில், 10 நாளில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கை 23,833. இதில், 10.47 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 7,255 பேருக்கு காய்ச்சல் உறுதியானது. அவர்களுக்கு 10 நாள் வீடுகளில் தனிமை மற்றும் சிகிச்சை பெற  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எச்3என்2 வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் 15 பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். எனவே இந்த என்3என்2 என்று சொல்லக்கூடிய காய்ச்சல் முடிவுக்கு வந்திருக்கிறது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு என்பது கூடுதலாக ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனவே பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. எனவே பதட்டப்பட தேவையில்லை. ஆக்சிஜன், மருந்துகள் போன்ற வசதிகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: