பட்ஜெட்டில் கோரிக்கை நிறைவேற்றம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

சென்னை: ஆசிரியர் சார்பில் முன்வைத்த கோரிக்கைகளை பட்ஜெட் மூலம் நிறைவேற்றிய முதலவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு ஏப்ரலில் விழுப்புரத்தில் நடந்த தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் வழங்குவது போல தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை கோரிக்கையாக வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியிடம் முன்வைத்தோம்.

அதை ஏற்று இந்த பட்ஜெட்டில், அனைத்து பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆசிரியர் கூட்டணி வரவேற்று, நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அதேபோல பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் அனைத்து கல்வி துறைகளும் வரவேண்டும் என்பதையும் நிறைவேற்றியுள்ளனர். பள்ளிக் கட்டமைப்பு வசதிக்கும் மற்ற திட்டங்களை செயல்படுத்தவும் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதையும் வரவேற்கிறோம். அதே நேரத்தில் பழைய ஓய்வு ஊதிய திட்டம், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல், அகவிலைப் படி நிலுவைத் தொகை வழங்குதல் ஆகியவற்றையும் நிறைவேற்ற வேண்டும்.

Related Stories: