ஆன்லைன் சூதாட்டம் குறித்து மாநில அரசுகள் சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடெல்லி: ‘ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு’ என மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறி உள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் பாதிக்கப்பட்டு 44 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த  ஆண்டு செப்டம்பரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழ்நாட்டில் தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இதற்கான மசோதா சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபரில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை 4 மாதமாக கிடப்பில் போட்ட ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் தராமல், இம்மாத துவக்கத்தில் மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டம் குறித்து சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என மக்களவையில் ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் நேற்று பதிலளித்துள்ளார். திமுக எம்பி பார்த்திபன், ஆன்லைன் சூதாட்டம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு ஒன்றிய இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த பதிலில், ‘‘பந்தயம், சூதாட்டம் ஆகியவை அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் பட்டியல் 2ன் 34வது பிரிவின் கீழ் வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது. அதன்படி, ஆன்லைன் உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு எதிராக மாநில அரசுகள் சட்டங்களை இயற்றி உள்ளன. மேலும், கடந்த 2022 டிசம்பர் 23ல் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, வணிக ஒதுக்கீடு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, திறன் அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டுகள் ஒன்றிய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: