சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன் சிவில் சப்ளையர்ஸ் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

*ஏஐடியுசி சார்பில் நடந்தது

சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில் சிவில் சப்ளையர்ஸ் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு குடோனில் பணிபுரியும் சிவில் சப்ளையர்ஸ் கூலி தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக ஏஐடியூசி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முரளி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் தேர்தலின் போது சிவில் சப்ளையர்ஸ் கூலி தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் முதலமைச்சர் ஆக வெற்றி பெற்றவுடன் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஒன்று கூட நிறைவேற்றவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக சிவில் சப்ளையர்ஸ் கூலி தொழிலாளர்கள் மூட்டைகளை ஏற்றும் மற்றும் இறக்கும் பணி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மூட்டை இறக்கும் பணிக்கு 2 ரூபாயும், ஒரு மூட்டை ஏற்றினால் மூன்று ரூபாய் என வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் சிவில் சப்ளையர்ஸ் அதிகாரிகள் தற்போது இறக்கும் பணியை வெளியில் இருக்கும் கூலி தொழிலாளர்களுடன் செய்து வருகிறார்கள். இதனால் அரசை நம்பி இருக்கும் கூலி தொழிலாளர்கள் பெரும் அவதிப்படும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகவே சிவில் சப்ளையர்ஸ் அதிகாரிகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை சிவில் சப்ளை தொழிலாளர்களே செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் மாநில அரசு கூலி தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டை இறக்குமதி செய்ய ஐந்து ரூபாய் வழங்கப்படும் எனவும், ஏற்றுமதி செய்ய ஆறு ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தது. ஆனால் தற்போது வரை பழைய கூலி தொகையை வழங்கி வருகிறது. அதேபோல் கூலித் தொழிலாளர்களுக்கு மாதம் கவுரவ சம்பளமாக ₹10ஆயிரம் வழங்க வேண்டும். அவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு ஜோடி சீருடைகள் வழங்க வேண்டும்.

இரண்டு ஜோடி காலணிகள் வழங்க வேண்டும். மேலும் இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட பிடித்தம் செய்ய வேண்டும். அதேபோல் அதிகாரிகளில் மிரட்டல் இருக்கக் கூடாது. எங்கள் கோரிக்கைகளை உடனடியாக மாவட்ட கலெக்டர் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஏஐடியுசி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அய்யப்பா, செயலாளர் நாகராஜ், கவுரவ தலைவர் கோபி, பொருளாளர் மணி, துணைச் செயலாளர் ரகு உள்பட ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: