அச்சுறுத்தல் ஏதும் இல்லை: கொரோனா பரவலுக்கு உருமாறிய வைரஸ் தான் காரணம்.. மாஸ்க் அணிந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை..!!

டெல்லி: நாட்டில் சமீபத்தில் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு உருமாறிய வைரஸ் தான் காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் புதிய வகை வைரஸால் அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் எடுக்கப்பட்ட மாதிரிகளின்படி உருமாறிய எக்ஸ்பிபி1.16 என்ற புதிய வகை வைரஸால் பல இடங்களில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய சுகாதார அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் உருமாறிய வைரஸால் ஏற்பட்ட இழப்பு குறித்து இன்னும் முழுமையான விவரம் கிடைக்கப்படவில்லை என்று அந்த குழுவில் உள்ள மருத்துவர் சுமித்ரா தாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தி இருப்பதால் புதிய வகை வைரஸால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் சமீப காலமாக வெவ்வேறு வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதால் கொரோனா பரவலையும் கருத்தில் கொண்டு மாஸ்க் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சக புள்ளி விவரத்தின்படி கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் அதன் அண்டை மாநிலங்களான தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: