அடுத்த மூன்று ஆண்டுகளில் வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி

சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது: தமிழ்நாடு ஒரு வளர்ச்சி பெற்ற மாநிலமாக திகழ்ந்தாலும் சமூக, பொருளாதாரக் குறியீடுகளின் அடிப்படையில், சில வட்டாரங்கள் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. இப்பகுதிகளும் வளர்ச்சியடையும் வகையில், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் இலக்குகளை எட்டுவதற்காக ‘‘வளமிகு வட்டாரங்கள் திட்டம்’’ என்ற புதிய திட்டத்தை அரசு தொடங்கும். இதன் மூலம், மலைப்பகுதிகள் உள்பட மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய 50 வட்டாரங்கள் கண்டறியப்பட்டு, ஒவ்வொன்றிலும் ரூ.5 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதேபோல, நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான, சென்னை, பல்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட ‘‘வாழ உகந்த நகரங்கள் பட்டியலில்’’ முன்வரிசையில் உள்ளது. இருப்பினும், நகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக, வடசென்னையில், போதிய அளவில் அடிப்படை வசதிகளும்  கட்டமைப்புகளும் இல்லாத நிலை உள்ளது. மேலும், சென்னையில் சீரான, சமமான வளர்ச்சியை உறுதி செய்ய “வடசென்னை வளர்ச்சி திட்டம்” என்ற திட்டத்தை ரூ.1,000 கோடி செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும். இத்திட்டம் மூலம், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும் வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, இத்திட்டம் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியையும் நடைமுறையிலுள்ள திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.

Related Stories: