ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருட்டு வேலைக்கார பெண்ணிடம் 20 சவரன் நகைகள் மீட்பு

சென்னை: நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய விவகாரம் வீட்டு வேலைக்கார பெண்ணிடம் இருந்து 20 சவரன் தங்க நகைகள் மீட்பு, வைர, நவரத்தின நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா (41) கடந்த மாதம் 27ம் தேதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு  புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் நான் எனது தந்தை வீட்டில்  வசித்து கடந்த 2019ம் ஆண்டு எனது சகோதரியின் திருமணம் அன்று நகைகளை  அணிந்து இருந்தேன். அதன் பிறகு எனது நகைகளை வீட்டில் உள்ள லாக்கரில் வைத்தேன். கடைசியாக கடந்த பிப்.10 தேதி எனது  வீட்டில் உள்ள லாக்கரை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்து 60 சவரன்  தங்க நகைகள், வைர கம்மல், வைர நெக்லஸ் மாயமாகியுள்ளது.

 இதுபற்றி வீட்டில்  உள்ளவர்களிடம் விசாரித்தும், பல இடங்களில் தேடியும் நகை கிடைக்கவில்லை.  எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஈஸ்வரி, லட்சுமி, கார் டிரைவர் வெங்கட் ஆகிய  3 பேருக்கு என் லாக்கர் மற்றும் லாக்கர் சாவி வைக்கும் இடம் தெரியும்.  

லாக்கரின் பூட்டும் உடைக்கப்படவில்லை, வெளியாட்களும் யாரும் வீட்டுக்கு  வராத நிலையில் நகைகள் மட்டும் திருடு போயிருப்பது 3 பேர் மீது சந்தேகம்  எனக்கு உள்ளது. எனவே 3 பேரிடம் உரிய விசாரணை நடத்தி நகைகளை மீட்டு தர  வேண்டும் என புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை  குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கணி  வழக்குப்பதிவு செய்து, ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரி,  லட்சுமி, வெங்கட் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் வேலைக்கார பெண் ஈஸ்வரிடம் நடத்திய விசாரணையில் வீட்டில் யாரும் இல்லாத போது திட்டமிட்டு லாக்கர் சாவியை எடுத்து அதில் இருந்து தங்க, வைர நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரிடம் இருந்து திருடப்பட்ட 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், நவரத்தின நகைகள் குறித்து விசாரிக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக 20 சவரன் தங்க நகை மீட்கப்பட்டது. மேலும் மீதமுள்ள நகைகள் குறித்து லட்சுமி, ஈஸ்வரி, வெங்கட்  ஆகிய 3 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: