தொடர்ந்து 6வது நாளாக ஒத்திவைப்பு பாஜ எம்பிக்கள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: அதானி விவகாரத்தை திசைதிருப்பும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாஜ எம்பிக்களின் அமளி காரணமாக தொடர்ந்து 6வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. அதானி விவகாரத்தை திசை திருப்பவே, பாஜவினர் நாடாளுமன்றத்தை முடக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. நாடாளுமன்றத்தில் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கிய நிலையில், தொடர்ந்து 5 நாட்கள் பாஜ எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். லண்டனில் இந்திய ஜனநாயகம் பற்றி பேசியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜவினர் அமளி செய்து கடந்த வாரம் முழுவதும் அவையை முடக்கினர். வார விடுமுறைக்குப் பின் நேற்று காலை மக்களவை மீண்டும் கூடியது. அவை கூடியதுமே, லண்டன் விவகாரத்தில் ராகுல் மன்னிப்பு கேட்கக் கோரி பாஜ எம்பிக்கள் கூச்சலிட்டனர். பதிலுக்கு அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர்.

இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதே போல மாநிலங்களவையிலும் பாஜ எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களிலும் எந்த அலுவலும் நடக்காமல் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. பாஜவினர் அமளி காரணமாக தொடர்ந்து 6வது நாளாக நாடாளுமன்றம் முடங்கி உள்ளது. நாடாளுமன்றத்திற்கு வெளியே பேட்டி அளித்த மாநிலங்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் பிரமோத் திவாரி, ‘‘பிரதமரின் வழிகாட்டுதல் இல்லாமல் பாஜவில் எதுவும் நடக்காது. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென பலமுறை முயற்சித்தும் எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அரசு ஏன் ஒதுங்குகிறது? இந்த விவகாரத்தை திசை திருப்ப பாஜ எம்பிக்கள் அமளி செய்து நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் செய்கின்றனர். எம்பிக்கள் கூட்டுக்குழு அமைக்கப்படும் வரை நாங்களும் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். இது மக்களுக்கான போராட்டம்’’ என்றார்.

சமாஜ்வாடி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ் கூறுகையில், ‘‘அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட்டால் உண்மையான குற்றவாளி அகப்படுவார். பாஜவும் அம்பலப்படுத்தப்படும்’’ என்றார். திமுக எம்பி ஆ.ராசா, ‘‘இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரில் வந்து விளக்கம் தர வேண்டும்’’ என்றார். முன்னதாக அவை தொடங்கும் முன்பாக, காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், ஜேடியு, ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி, அவையில் அதானி விவகாரத்தை எழுப்ப முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லண்டனில் கூறிய ஜனநாயகம்  தொடர்பான கருத்து குறித்து மக்களவையில் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும்  என்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு  கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: