ஒன்றிய அரசு சார்பில் சீலிட்ட உறையில் தாக்கல் செய்த பதிலை ஏற்க மறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: ஒன்றிய அரசு சார்பில் சீலிட்ட உறையில் பதில் தாக்கல் செய்த பதிலை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. பாதுகாப்புத்துறையில் ஒரே வேலைக்கு ஒரே பென்சன் வழங்குவது தொடர்பான வழக்கு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஒன்றிய அரசின் பதிலை சீலிட்ட உறையில் தாக்கல் செய்தார். இதை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதுபற்றி நீதிபதிகள் கூறும்போது, ‘உச்ச நீதிமன்றத்தால் பின்பற்றப்படும் இந்த சீல் செய்யப்பட்ட கவர் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம்.

ஏனெனில் உயர் நீதிமன்றங்கள் இதைப் பின்பற்றும். மேலும் இது நீதிமன்றத்தில் நியாயமான நடைமுறையின் அடிப்படைக் கொள்கைக்கு முரணானது. தயவுசெய்து சீல் செய்யப்பட்ட உறையில் உள்ள தகவலை எதிர் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது அவரை அறைக்கு அழைத்துச் செல்லுங்கள். நான் தனிப்பட்ட முறையில் சீல் செய்யப்பட்ட உறைகளை வெறுக்கிறேன். நீதிமன்றத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இது நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதாகும். எனவே இதில் எந்த ரகசியமும் இல்லை’ என்று தெரிவித்தனர்.

Related Stories: