டெல்லியில் மோடி - கிஷிடா அறிவிப்பு இந்தியா-ஜப்பான் உறவை விரிவுபடுத்த ஒத்துழைப்பு

புதுடெல்லி: இந்தியா, ஜப்பான் உறவை விரிவுபடுத்துவது எனவும், இது அமைதியான, நிலையான, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு முக்கியம் என்றும் பிரதமர்கள் மோடியும், புமியோ கிஷிடாவும் கூட்டாக அறிவித்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போரால் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியால் அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக நேற்று காலை டெல்லி வந்தார். ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் இரு தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், தற்போது ஜி20 அமைப்புக்கு இந்தியாவும், ஜி7 அமைப்பிற்கு ஜப்பானும் தலைமை தாங்குவது உலகளாவிய நன்மைக்கு இரு தரப்பும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான சிறந்த வாய்ப்பு என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி தனது அறிக்கையில், ‘ஜப்பான் பிரதமர் கிஷிடாவுடனான சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்தும் குறிப்பாக பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடு, சுகாதாரம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம். செமி கண்டக்டர்கள் மற்றும் பிற முக்கியமான தொழில்நுட்பங்களுக்கான நம்பகமான விநியோக சங்கிலிகளின் முக்கியத்துவம் குறித்தும் விவாதித்தோம்.

எங்களின் இருதரப்பு உறவை மேலும் விரிவுபடுத்துவது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு முக்கியமானது’ என கூறி உள்ளார். இந்தியா உடனான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருவதாகவும், இது இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவதோடு, ஜப்பானுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதாக கிஷிடா கூறினார். அதோடு, வரும் மே மாதம் ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு கிஷிடா அழைப்பு விடுத்தார்.

Related Stories: