எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டபேரவை நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு திருக்குறள் கூறி அதற்கு விளக்கம் அளித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையை படிக்க ஆரம்பித்தார். அப்போது, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச மைக் வழங்குமாறு கூறினார். அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்எல்ஏக்கள் பேச அனுமதி அளிக்குமாறு கோஷங்களை எழுப்பினார்.

இதற்கு, பதிலளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மேசையை தட்டி பட்ஜெட் உரைக்கு வரவேற்பு தெரிவித்தனர். ஆனாலும், அதிமுக எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பிக்கொண்டு இருந்தனர்.

சபாநாயகர் அப்பாவு, ‘‘நீங்கள் என்ன பேசினாலும் அவைக்குறிப்பில் ஏறாது, பட்ஜெட் குறிப்புகள் மட்டும்தான்” அவைக்குறிப்பில் இடம்பெறும் என்று அறிவித்தார். இதையடுத்து, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேட்டியளிக்கையில், ‘‘தமிழகத்தில் பால் விலை, மின் கட்டணம், சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளுக்காக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.

Related Stories: