அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய ஓபிஎஸ் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பி.எஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானதாக கூறவில்லை.

இந்த பதவிகள் குறித்து நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த மனுவையும் விசாரிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி பிரகாஷ் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு முறையிட்டார். இதனை, ஏற்றுக்கொண்ட நீதிபதி புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தார்.

Related Stories: