தமிழ்நாட்டில் ரூ.62,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைப்பு: பேரவையில் நிதி அமைச்சர் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2023-2024ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக, அனைத்து தளங்களிலும் சமூகநீதியை உறுதி செய்வதற்கான தொலைநோக்குப்பார்வையைக் கொண்ட இந்த திராவிட மாடல் ஆட்சிமுறை வெற்றிநடை போட்டு வருகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட திராவிட இயக்கம். சுயமரியாதைச் சிந்தனை வழிவந்த முதல்வர் மு.கஸ்டாலின், தமிழ்ச் சமுதாயத்தின் ஆணிவேரான இந்தக் கொள்கைகளின் அரணாகவும் உயிர் மூச்சாகவும் திகழ்கிறார்.

தேசிய அளவோடு ஒப்பிட்டு பார்க்கையில், நம் மாநிலத்தில் கடந்த ஆண்டு அதிகப் பொருளாதார வளர்ச்சியை எய்தியுள்ளதோடு, வருவாய் மற்றும் நிதிப்பற்றாக்குறையையும் ஒன்றிய அரசைவிடக் கணிசமாகக் குறைத்துள்ளோம்.

இது நமது முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமைப்பண்பிற்கும் திறன்மிக்க நிதிமேலாண்மைக்கும் சான்றாகும்.கடந்த 2 ஆண்டுகளாக அதிகச் செலவுள்ள பல நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும்போதிலும், பல கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, நாங்கள் பதவியேற்கும் போது சுமார் 62,000 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, நடப்பு ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு குறைத்துள்ளோம்.

இது, கோவிட் பெருந்தொற்றிற்கு முந்தைய 2019-20ம் ஆண்டின் பற்றாக்குறையை ஒப்பிட்டாலும், ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் குறைவாகும்.

வருவாய் பற்றாக்குறையை அறவே அகற்ற வேண்டுமென்ற நிதிப் பொறுப்புடைமைச் சட்டத்தின் இலக்கை எட்டிட, அரசின் சமூக நலத்திட்டங்களுக்கும் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கும் எவ்வித பாதிப்புமின்றி, வரும் ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை படிப்படியாகக் குறைக்கப்படும். 2006 முதல் 2011 வரையுள்ள ஆண்டுகளில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் சராசரி எட்டு சதவீதமாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய், கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு, 2020-21 ஆம் ஆண்டு 5.58 சதவீதமாகக் குறைந்தது. ஆண்டுகளாக அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக இந்த விகிதம் 6.11 சதவீதமாக தற்போது உயர்ந்துள்ள போதிலும், இதனை மேலும் உயர்த்தி நலத்திட்டங்களுக்கான வருவாய் ஆதாரங்களை ஈட்டிட முனைப்போடு செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: