திமுக அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி வரை புதிய திட்டங்கள் அறிவிப்பு: பழனிவேல் தியாகராஜன் பேச்சு

சென்னை: 2 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி வரை புதிய திட்டங்களை அறிவித்துள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலின்போது அவர் பேசிதாவது: புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து தாக்கல் செய்யும் 2வது முழு நிதிநிலை அறிக்கை இது. வருவாய்ப் பற்றாக்குறை இல்லா மாநிலம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். முதலீடுகளை ஈர்க்கவும், வளர்ச்சிக்கும் இது ஒரு உகந்த சூழலை உருவாக்கும். அதேபோல, வேகமாக அதிகரிக்கும் வட்டிச் செலவினங்கள் மற்றும் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசால் விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதும், இந்த சாதனையை புரிந்துள்ளோம். இது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்திற்கு சான்றாகும்.

இந்த நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அதே வேளையில், முதல்வர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும், அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், குறிப்பாக நலிவுற்றோர், மகளிர் ஆகியோருக்கு வாய்ப்புகளும் வளர்ச்சியும் ஏற்படுத்தும் விதம் புதுத் திட்டங்கள் வடிவமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, 2021 மே மாதம் 7ம் தேதி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, இந்த அரசு ரூ.1 லட்சம் கோடி அளவிற்கும் மேலான புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் அரசின் மீது அதிக நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் கொண்டுள்ளனர். குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் சீரான, செம்மையான நிர்வாகத்தினாலும் செயல்படுத்தியுள்ள பல உன்னத புதிய திட்டங்களாலும் மக்களின் எதிர்பார்ப்புகள் மேலும் உயர்ந்துள்ளது. முதல்வரின் இலக்குகளையும், தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பெருமளவில் நிறைவேற்றும் வகையில் இந்த வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* மாநிலத்தின் செலவினங்கள்

2023-24ம் ஆண்டிற்கான அரசின் மொத்த செலவினங்கள் ரூ.3,65,321 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23ம் ஆண்டை விட (திருத்த மதிப்பீடு) 13.7 சதவீதம் அதிகமாகும்.

* மாநிலத்தின் வருவாயினங்கள்

2023-24ம் ஆண்டிற்கான வருவாய் வரவினங்கள் ரூ.2,70,515 கோடி அரசு மதிப்பீடு செய்துள்ளது. இது 2022-23ம் ஆண்டை விட (திருத்த மதிப்பீடு) 10.1% அதிகமாகும். இது அரசின் சொந்த வரிகள் வாயிலாக பெறப்படும் வருவாய் 19.3 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories: