தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24: எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக, தற்போது பிரபலமாகி வரும்; பசுமை மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை இடம்

பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணிக்க, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11  நாட்களில் சென்னையில் நடத்தப்பட உள்ளது. இதற்கென, வரவு-செலவு திட்டத்தில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 85 தொழில் திட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களின் மூலம் 1,44,028 கோடி ரூபாய் முதலீட்டில் 2,14,478 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.  பசுமை மின் வாகனங்கள் உற்பத்தியிலும், தமிழ்நாடு முதன்மை இடத்தை வகித்து வருகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின்வாகனங்களில் 46 சதவீத வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை. பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தோல் அல்லாத காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. திண்டிவனத்தில் 5,400 பெண்களுக்கும், பெரம்பலூரில் 31,600 பெண்களுக்கும்  வேலைவாய்ப்புகள் தரக்கூடிய இரண்டு தொழிற்சாலைகளுக்கு முதல்வர் நேரில் சென்று அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும், இரண்டு புதிய தொழிற்சாலைகள் ராணிப்பேட்டையிலும், கள்ளக்குறிச்சியிலும் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 32,000 பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

* பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி

அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டிடங்கள் கட்டிடவும் ரூ.7,000 கோடி செலவில், ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை’ அரசு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில், ரூ.2,000 கோடி ரூபாய் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். ‘எண்ணும் எழுத்தும் திட்டமானது’ 2025ம் ஆண்டுக்குள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அடிப்படை கல்வியறிவும் எண்கணித திறனும் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், வரும் நிதியாண்டில் ரூ.110 கோடி செலவில் நான்காம் ஐந்தாம் வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். பட்ெஜட்டில் பள்ளிக்கல்வித் துறைக்காக ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* படைவீரர்களுக்கான கருணை தொகை ரூ.40 லட்சமாக அதிகரிப்பு

தம் இன்னுயிர் ஈந்து நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் படை வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில், போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளின் போது உயிர்த் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசால் வழங்கப்படும் கருணைத் தொகை 20 லட்சம் ரூபாயிலிருந்து, இரு மடங்காக உயர்த்தி 40 லட்சம் ரூபாயாக வழங்கப்படும். மேலும், வீரதீரச் செயல்களுக்கான உயர் விருதுகளைப் பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினருக்கு தற்போது வழங்கப்படும் பரிசுத்தொகையும் நான்கு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக ரூ.5,346 கோடி ஒதுக்கீடு

அங்கீகரிக்கப்பட்ட நிலங்கள் விற்பனை பதிவு செய்யப்பட்டவுடன், அவற்றிற்கான பட்டாவை தடையின்றி மாற்றம் செய்வதற்காக, வருவாய், பத்திரப்பதிவு, நகர் ஊரமைப்பு துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து, புதிய மென்பொருள் உருவாக்கப்படும். இந்நிதியாண்டில், கிராம நத்தப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு, நத்தம் நிலங்களுக்கான பட்டா மாற்றும் முறை இணையவழியில் மேற்கொள்ளப்படும். மே, 2021 முதல் புதிதாக 5,76,725 பேர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர, பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான ஒரு லட்சம் பேர்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும். இதன்மூலம், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 35.8 லட்சமாக உயரும். சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக இம்மதிப்பீடுகளில் 5,346 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தொழில் துறைக்கு ரூ.3,268 கோடி ஒதுக்கீடு

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் ரூ.410 கோடி  மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால், ஏறத்தாழ 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும்,  கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் 1,500 பணியாளர்கள் தங்கும் வசதிகளுடன் தொழிலாளர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும். தொழில் துறைக்கு ரூ.3,268 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

Related Stories: